6-வது விரலை அகற்ற சென்ற சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை
|சிறுமியின் வாயில் பஞ்சு வைக்கப்பட்டு பிளாஸ்திரி ஒட்டப்பட்டு இருந்தது.
கோழிக்கோடு,
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் செறுவன்னூர் மதுரா பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு 4 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமிக்கு கையில் 6 விரல்கள் இருந்தன. இதையடுத்து 6-வது விரலை அகற்றுவதற்காக சிறுமியின் பெற்றோர் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதனைகள் முடிந்து சிறுமியின் 6-வது கைவிரலை அறுவை சிகிச்சை செய்து நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி நேற்று காலை இந்த அறுவை சிகிச்சை சிறுமிக்கு நடந்தது. சிகிச்சை முடிந்ததும் சிறுமி ஆபரேஷன் தியேட்டரில் (அறுவை சிகிச்சை மையம்) இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட போது சிறுமியின் வாயில் பஞ்சு வைக்கப்பட்டு பிளாஸ்திரி ஒட்டப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுபற்றி டாக்டர்களிடம் கேட்டபோது, சிறுமியின் நாக்கில் அறுவை சிகிச்சை செய்ததாக கூறினர். ஆனால் சிறுமிக்கு நாக்கில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும், 6-வது விரலை அகற்றுவதற்காக தான் ஆஸ்பத்திரிக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.
அப்போது டாக்டர்கள், சிறுமி அறுவை சிகிச்சைக்கு முன் அழுதபோது அவளின் நாக்கில் பிரச்சினைகள் இருப்பது கண்டு அதனை தீர்ப்பதற்காக அறுவை சிகிச்சை செய்ததாக தெரிவித்தனர். ஆனால் பெற்றோர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் டாக்டர்கள் நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தனர். இதையடுத்து மீண்டும் அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 6-வது விரல் அகற்றப்பட்டது.
இந்தநிலையில் டாக்டர்களின் அலட்சியத்தால் தனது மகளுக்கு நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கோழிக்கோடு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி மற்றும் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி டீன், கேரளா சுகாதாரத்துறை மந்திரி ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து இது குறித்து உடனடியாக உரிய விளக்கம் அளிக்குமாறு கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனுக்கு கேரளா சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
6-வது கைவிரலை அகற்றுவதற்காக மருத்துவமனைக்கு சென்ற சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.