கோலாரில் தக்காளி விலை கடும் சரிவு
|கோலாரில் தக்காளி விலை கடும் சரிவைடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோலார் தங்கவயல்:
கோலாரில் தக்காளி விலை கடும் சரிவைடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தக்காளி
கோலார் மாவட்டத்தில் ஏ.பி.எம்.சி. தக்காளி மார்க்கெட் அமைந்திருக்கிறது. இது ஆசியாவிலேயே 2-வது பெரிய தக்காளி மார்க்கெட் ஆகும். கடந்த மாதம்(ஜூலை) ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால், 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.2.700-க்கு மேல் விற்பனை ஆனது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் இல்லத்தரசிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாயினர். தக்காளி விலை உயர்வால் சிலர் புளியை குழம்புக்கு பயன்படுத்த தொடங்கினர். இதனால் புளியின் விலையும் அதிகரித்தது.
விலை சரிவு
இந்த விலை உயர்வு கடந்த 10-ந் தேதி வரை நீடித்தது. பின்னர் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால், தக்காளியின் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்றைய நிலவரப்படி முதல் ரக தக்காளி 15 கிலோ பெட்டி ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சில்லரை விலையில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.23-க்கு விற்பனை செய்யப்பட்டது. நாள் ஒன்றுக்கு 18 டன், அதாவது 1 லட்சத்து 20 ஆயிரத்து 628 தக்காளி பெட்டிகள் தேவைப்படுகிறது. ஆனால் அதை விட அதிக அளவில் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து இருந்ததால் தக்காளியின் விலை கடும் சரிவடைந்தது. தக்காளி விலை சரிவால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.