விளைநிலத்தில் புகுந்து 4 ஏக்கரில் தக்காளி திருட்டு; மர்ம நபர்கள் துணிகரம்
|சீனிவாசப்பூர் அருகே விளைநிலத்தில் புகுந்து 4 ஏக்கரில் இருந்து தக்காளியை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
கோலார் தங்கவயல்:
சீனிவாசப்பூர் அருகே விளைநிலத்தில் புகுந்து 4 ஏக்கரில் இருந்து தக்காளியை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
தக்காளி திருட்டு
கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் தாலுகாவிற்கு உட்பட்டது சங்கீதஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில் வெங்கடேசப்பா என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான அவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டு இருந்தார். இந்த நிலையில் தக்காளி சாகுபடிக்கு தயாராக இருந்தன. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் வெங்கடேசப்பாவின் விளைநிலத்துக்கு சரக்கு வாகனத்தில் வந்தனர். அவர்கள் விளைநிலத்தில் இருந்த தக்காளிகளை பறித்து வாகனத்தில் ஏற்றி திருடிக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
அதிர்ச்சி
நேற்று காலையில் தனது விளைநிலத்திற்கு சென்ற வெங்கடேசப்பா தக்காளி திருடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவரது நிலத்தில் இருந்து காய்கறியையும் மர்ம நபர்கள் திருடிச் சென்று இருந்தனர். இதுபற்றி வெங்கடேசப்பா சீனிவாசப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்ம நபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.
ஏற்கனவே கோலார் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டுக்கு தக்காளி கொண்டு சென்ற ஒரு விவசாயியை தாக்கி 2 டன் தக்காளியுடன் சரக்கு வாகனத்தை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர்.
தமிழக தம்பதி...
அந்த வழக்கில் தமிழக தம்பதி கைது செய்யப்பட்டனர். அதுபோல் மாநிலம் முழுவதும் பல இடங்களில் தக்காளி திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. தக்காளியின் விலை உயர்ந்திருப்பதால் இந்த திருட்டு சம்பவங்கள் நடப்பதாகவும், இதுபற்றி உரிய நடவடிக்கை எடுத்து மர்ம நபர்களை கைது செய்வோம் என்றும் போலீசார் கூறினர்.