< Back
தேசிய செய்திகள்
நாளைய தினம் கல்வி பிரிவில் ஒரு குறிப்பிடத்தக்க நாளாக இருக்கும்:  பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

நாளைய தினம் கல்வி பிரிவில் ஒரு குறிப்பிடத்தக்க நாளாக இருக்கும்: பிரதமர் மோடி

தினத்தந்தி
|
19 Feb 2024 11:22 PM IST

இந்த அனைத்து கல்வி திட்டங்களுக்கான மொத்த மதிப்பு ரூ.13,375 கோடி ஆகும்.

புதுடெல்லி,

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பிரதமர் மோடி நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஜம்முவில் மவுலானா ஆசாத் ஸ்டேடியத்திற்கு வருகை தரும் அவர், ரூ.32 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டி, நாட்டுக்கு அவற்றை அர்ப்பணிக்க உள்ளார்.

அவர், நாட்டிலுள்ள ஜம்மு ஐ.ஐ.எம்., புத்தகயா ஐ.ஐ.எம். மற்றும் விசாகப்பட்டினம் ஐ.ஐ.எம். ஆகிய 3 ஐ.ஐ.எம்.களுக்கான புதிய வளாகங்களையும் தொடங்கி வைக்க உள்ளார்.

நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயாக்களுக்கு 20 புதிய கட்டிடங்கள் மற்றும் நவோதலயா வித்யாலயாக்களுக்கு 13 புதிய கட்டிடங்களையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது. மாணவர்களின் கல்வி தேவைகளை பூர்த்தி செய்வதில் இந்த கட்டிடங்கள் முக்கிய பங்காற்றும் என்றும் தெரிவித்து உள்ளது.

ஐ.ஐ.டி. பிலாய், ஐ.ஐ.டி. திருப்பதி, ஐ.ஐ.டி. ஜம்மு, ஐ.ஐ.ஐ.டி.டி.எம். கர்னூல் மற்றும் கான்பூரில் உள்ள ஐ.ஐ.எஸ். ஆகியவற்றுக்கான நிரந்தர வளாகங்களையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இதுதவிர, உத்தரகாண்டின தேவபிரயாக் மற்றும் திரிபுராவின் அகர்தலாவில் உள்ள மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கான 2 வளாகங்களையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த அனைத்து கல்வி திட்டங்களுக்கான மொத்த மதிப்பு ரூ.13,375 கோடி ஆகும்.

இதுபற்றி பிரதமர் மோடி குறிப்பிடும்போது, பல வகையிலான வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கம்! நான் நாளை (20-ந்தேதி) ஜம்முவில், முக்கிய வளர்ச்சி பணிகளை தொடங்கி வைப்பதற்காக ஆவலாக காத்திருக்கிறேன். இந்த பணிகள், வாழ்க்கையை எளிமையாக்கும்.

ஐ.ஐ.டி.க்கள் மற்றும் ஐ.ஐ.எம்.கள் உள்பட பல்வேறு மையங்களுக்கு நிரந்தர வளாகங்கள் கிடைக்க உள்ள சூழலில், இந்த தினம் கல்வி பிரிவில் ஒரு குறிப்பிடத்தக்க நாளாக இருக்கும் என தெரிவித்து உள்ளார். இதேபோன்று ஜம்முவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வளாகத்தினையும் அவர் திறந்து வைக்க உள்ளார். ஜம்மு விமான நிலையத்தில் புதிய முனையத்திற்கான கட்டிடம் ஒன்றையும் அவர் திறந்து வைக்க உள்ளார்.

மேலும் செய்திகள்