'நாளை பா.ஜ.க. அலுவலகத்திற்கு செல்கிறோம்; பிரதமர் எங்களை கைது செய்யட்டும்' - கெஜ்ரிவால்
|நாளை ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் பா.ஜ.க. அலுவலகத்திற்கு செல்ல இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து தற்போது அவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், ஆம் ஆத்மி எம்.பி. சுவாதி மாலிவாலை தாக்கியதாக எழுந்த புகாரில், அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது;-
"ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா மற்றும் டெல்லி மந்திரிகள் அதிஷி, சவுரப் பரத்வாஜ் ஆகியோரையும் சிறைக்கு அனுப்புவோம் என்று பா.ஜ.க. கூறுகிறது. நான் எனது எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களுடன் நாளை மதியம் பா.ஜ.க. அலுவலகத்திற்கு செல்வேன். எங்களில் யாரை வேண்டுமானாலும் பிரதமர் கைது செய்து சிறைக்கு அனுப்பலாம்.
ஆம் ஆத்மி என்பது ஒரு கருத்தியல். எத்தனை ஆம் ஆத்மி தலைவர்களை நீங்கள் சிறையில் அடைக்கிறீர்களோ, அதை விட நாடு நூறு மடங்கு அதிக தலைவர்களை இந்த நாடு உருவாக்கும். ஆம் ஆத்மி செய்த தவறு என்பது டெல்லியில் நல்ல பள்ளிகளைக் கட்டியது, மொகல்லா கிளினிக்குகளை அமைத்து இலவச மருத்துவ சிகிச்சை வழங்கியது மற்றும் நகரத்தில் 24 மணிநேர இலவச மின்சார விநியோகத்தை உறுதி செய்தது ஆகியவைதான். இவற்றை பா.ஜ.க.வால் செய்ய முடியவில்லை."
இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.