'மொத்த உலகமும் இன்று இந்தியாவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறது' - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
|தனது பணியில் கடந்த 10 ஆண்டுகள் மிகவும் திருப்தியான வருடங்களாக இருந்ததாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மத்திய அரசின் 'விக்சித் சங்கல்ப் பாரத் யாத்ரா' நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"ஒரு வெளியுறவுத்துறை மந்திரியாக நான் பல்வேறு நாடுகளுக்கு செல்கிறேன். உலகம் முழுவதும் இன்று நம்மைப் பற்றி பேசுகிறார்கள். உங்களால் எப்படி இந்த மாற்றங்களை செய்ய முடிகிறது என்று அவர்கள் கேட்கிறார்கள். அதற்கு காரணம் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை என்று நான் அவர்களிடம் கூறுகிறேன்.
நம்மிடம் ஆதார் உள்ளது. அனைவரிடமும் வங்கிக் கணக்குகள் உள்ளன. வங்கிக் கணக்குகள் மூலம் ஆட்சியை மட்டுமல்ல, சமூகத்தையும் மாற்றியுள்ளோம். அதை தொலைபேசியுடன் இணைப்பதன் மூலம், பயனாளர்கள் நேரடியாக பலன்களை பெறுவதை உறுதி செய்துள்ளோம். எனவே தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தியுள்ளோம்.
கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் இந்தியாவையும், மக்களின் வாழ்க்கையையும் மாற்றுவதற்கு மகத்தான பணிகளை செய்துள்ளது. சுகாதாரம், தண்ணீர், மின்சாரம், வீடு, கல்வி என இந்தியர்கள் சந்திக்கும் பல பிரச்சினைகள் வளர்ந்த நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளிலும் உள்ளன.
நான் அரசாங்கத்தில் 46 வருடங்களாக பணி செய்கிறேன். ஆனால் கடந்த 10 ஆண்டுகள் உண்மையில் எனக்கு மிகவும் திருப்தியான வருடங்களாக இருந்தன. ஏனெனில், அரசாங்கம் செயல்படும் விதத்தில் முழுமையான மாற்றத்தை நான் கண்டிருக்கிறேன்."
இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.