< Back
தேசிய செய்திகள்
நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை: முதல்-மந்திரிக்கு, காங். எம்.எல்.ஏ. பரபரப்பு கடிதம்
தேசிய செய்திகள்

நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை: முதல்-மந்திரிக்கு, காங். எம்.எல்.ஏ. பரபரப்பு கடிதம்

தினத்தந்தி
|
3 Sept 2023 3:23 AM IST

நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை என்றும், மின்சார துறை மந்திரி, மின்வாரிய அதிகாரிகள் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான பசவராஜ் ராயரெட்டி, முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த 2-வது மாதத்திலேயே மந்திரிகள் மீது அதிருப்தி அடைந்த மூத்த எம்.எல்.ஏ.க்களான பசவராஜ் ராயரெட்டி உள்ளிட்டோர் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். இதையடுத்து, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்களுடன் முதல்-மந்திரி சித்தராமையாவும், மாநில தலைவரும், துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமாரும் ஆலோசனை நடத்தினர்.

எம்.எல்.ஏ.க்களின் பிரச்சினைகளை கேட்டு அறிந்து கொண்டதுடன், தொகுதிக்கு உரிய நிதி ஒதுக்குவதாக உறுதி அளித்தனர். இந்த நிலையில், மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கும் கொப்பல் மாவட்டம் எலபுர்கா தொகுதி காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ.வான பசவராஜ் ராயரெட்டி, மின்வாரிய அதிகாரிகள், தான் சொல்வதை கேட்பதில்லை என்று கூறி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

அரசின் மூத்த அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் சொல்வதை கேட்பதில்லை. குறிப்பாக எனது உத்தரவை மூத்த அதிகாரிகள் காது கொடுத்து கூட கேட்பதில்லை. எலபுர்கா தொகுதிக்கு 200 டிரான்ஸ்பார்மர்கள் தேவையாக உள்ளது. பழைய டிரான்ஸ்பார்மர்களை மாற்றிவிட்டு புதிதாக 200 டிரான்ஸ்பார்மர்களை அமைக்கும்படி செஸ்காம்(மின்வாரியம்) அதிகாரிகளிடம் தொடர்ந்து கூறியும் கண்டுகொள்ளவில்லை. நான் சொல்வதற்கு அதிகாரிகள் மதிப்பு அளிப்பதில்லை.

டிரான்ஸ்பார்மர்கள் மாற்றப்படாததால் விவசாய தோட்டங்களுக்கு மின் இணைப்பு வழங்க முடியவில்லை. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மின்சார துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு உடனே ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்