நிலப்பிரச்சினையை தீர்க்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது
|நிலப்பிரச்சினையை தீர்க்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா கவுராடி கிராம பஞ்சாயத்தில் வளர்ச்சி திட்ட அதிகாரியாக பணியாற்றி வருபவர் மகேஷ் (வயது 20). கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலம் தொடர்பான பிரச்சினையை தீர்த்து வைக்கும்படி கூறினார். அதாவது விவசாயிக்கு அவரது நிலத்தின் அருகே உள்ள மற்றொரு விவசாயிக்கு நிலப்பிரச்சினை இருந்து வந்தது. அந்த நிலப்பிரச்சினையை தீர்த்து வைக்கும்படி மகேஷ் கூறியிருந்தார். இந்த கோரிக்கையை ஏற்ற கிராம பஞ்சாயத்து வளர்ச்சி திட்ட அதிகாரி மகேஷ், ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதில் விவசாயிக்கு உடன்பாடு ஏற்படவில்லை. உடனே அவர் இது குறித்து லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரை ஏற்ற லோக் அயுக்தா போலீசார் விவசாயியை அழைத்து ஆலோசனை வழங்கி ரசாயன பொடி தடவிய ரூ.20 ஆயிரத்தை கொடுத்தனுப்பினர். அந்த பணத்தை விவசாயி, கிராம பஞ்சாயத்து வளர்ச்சி திட்ட அதிகாரி மகேஷிடம் வழங்கினார். மகேஷ் அந்த பணத்தை வாங்கியதும், அங்கு மறைந்திருந்த லோக் அயுக்தா போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து அவர் மீது லோக் அயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.