< Back
தேசிய செய்திகள்
தற்சார்பு இந்தியாவை உருவாக்க நாம் வேளாண்மையில் தற்சார்பை அடைய வேண்டும் - மத்திய இணை மந்திரி கைலாஷ் சவுத்ரி
தேசிய செய்திகள்

தற்சார்பு இந்தியாவை உருவாக்க நாம் வேளாண்மையில் தற்சார்பை அடைய வேண்டும் - மத்திய இணை மந்திரி கைலாஷ் சவுத்ரி

தினத்தந்தி
|
15 Oct 2022 10:03 AM IST

தற்சார்பு இந்தியாவை உருவாக்க நாம் வேளாண்மையில் தற்சார்பை அடைய வேண்டும் என மத்திய இணை மந்திரி கைலாஷ் சவுத்ரி கூறியுள்ளார்.

கட்டாக்,

இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மேற்குவங்கம், ஒடிசா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் யூனியன் பிரதேசங்களான அந்தமான் மற்றும் நிகோபார் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் 26-வது கூட்டத்தை கட்டாக்கில் உள்ள தேசிய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடத்தியது.

மெய்நிகர் முறையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் தொடக்க அமர்வில் உரையாற்றிய மத்திய இணை மந்திரி கைலாஷ் சவுத்ரி கூறுகையில்,

விவசாயத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதும், அது கடைக்கோடி விவசாயியை சென்றடைவதை உறுதி செய்வதும் அவசியம். "விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க அவர்களது கடன் சுமையை குறைக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு சிறந்த விதைகளை வழங்க வேண்டும். சந்தை இணைப்பு மற்றும் சேமிப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். களப்பணியில் மாநிலங்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். விவசாயிகளுக்கு உதவி செய்ய மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது". ரசாயனம் மற்றும் உரம் சார்ந்த விவசாயத்தில் இருந்து மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

"விவசாயிகளுக்கான தொழில்நுட்பத்தை விரிவுப்படுத்த வேண்டும், ஆராய்ச்சிகளால் மட்டுமே அதனை செய்து விட முடியாது" என்றார். ஆராய்ச்சிகளின் இறுதிப்பலன் விவசாயிகளை சென்றடைய வேண்டும் என்று கூறினார்.

நாம் வேளாண்மையில் தற்சார்பு அடைய வேண்டும். அப்போதுதான் இந்தியா தற்சார்பு நாடாக மாறும். கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவசாயத் துறைக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

முன்னேற்றத்துக்கான வழிகளை ஆராய்வதுடன், பிரச்சினைகளை சுட்டிக்காட்டவும், அதற்கான தீர்வுகளை தெரிந்து கொள்ளவும் இதுபோன்ற கூட்டங்கள் தேவைப்படுகிறது. ஒடிசா, மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்கள் மிக மோசமான தட்பவெட்ப நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே விவசாயிகளுக்கான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்றார்.

விவசாய நடவடிக்கைகளை ஒரு வணிக முயற்சியாக எடுத்துக் கொள்ளாத வரை முழுமையான பலன்களையும், லாபகரமான வருமானத்தையும் பெற முடியாது என்று குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்