தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயற்சி; முன்னாள் ராணுவ வீரர் கைது
|திருமணத்திற்கு மறுத்த தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயற்சி செய்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மங்களூரு;
பெண் ஊழியர்
தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகாவை சேர்ந்தவர் விதீப் குமார். முன்னாள் ராணுவ வீரர். இவர் கடந்த சில மாதங்களாக அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிறுவனத்தில் திங்கலாடி கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண், ஊழியராக வேலை செய்து வருகிறார். அவரை விதீப் ஒருதலையாக காதலித்ததாக தெரிகிறது.
மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். எனினும், அவர் அந்த பெண்ணை விடாமல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று நிறுவனத்தில் வேலையை முடித்து விட்டு அந்த பெண் கும்ராவில் இருந்து திங்கலாடி பகுதிக்கு பஸ்சில் சென்றார்.
பின்னர் அவர் பஸ்சை விட்டு இறங்கி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த விதீப் குமார், அந்த பெண்ணை வழிமறித்து பேசியுள்ளார். அப்போது அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.
போலீசில் புகார்
ஆனால் அந்த பெண் அதற்கு மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த விதீப், அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கத்தி கூச்சலிட்டார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் விதீப் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இதையடுத்து அந்த பெண் சம்பவம் குறித்து சம்பியா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், விதீப் குமாரை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.