பயன்தூக்கார் செய்த உதவி...கடலினும் பெரிது: உதவிய இஸ்லாமிய ஆசிரியைக்கு நன்றிக்கடன் செலுத்திய தமிழக அய்யப்ப பக்தர்!
|இஸ்லாமிய ஆசிரியை ஒருவர் விபத்தில் கால்களை இழந்து தவித்த கண்ணனுக்கு ரூ.8 லட்சத்தில் வீடு கட்டி உதவினார்.
திருவனந்தபுரம்,
எந்தப்பிரதி பலனும் கருதாமல் செய்த உதவியின் நன்மை ஆனது கடலைவிடவும் பெரியது. அதுபோல இஸ்லாமிய ஆசிரியை ஒருவர் விபத்தில் கால்களை இழந்து தவித்த கண்ணன் என்பவருக்கு ரூ.8 லட்சத்தில் வீடு கட்டி உதவினார். அதற்காக தற்போது தனது நன்றி கடனுக்காக அவர் நலமாக இருக்க வேண்டி சுமார் 300 கி.மீ தூரம் வீல் சேரில் சென்று சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய உள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மட்டுமின்றி மாற்றுத்திறனாளி பக்தர்களும் வந்து தரிசனம் பெற்றுச் செல்கின்றனர்.
இதில் கேரள மாநிலம் மலப்புரத்தில் வசித்து வருகிறார். தமிழகத்தை சேர்ந்த இவர் மாற்றுத்திறனாளி ஆவார். தனது வாழ்க்கைக்கு உதவிய இஸ்லாமிய ஆசிரியைக்காக சபரிமலை பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது பெயர் கண்ணன் (வயது 49). தொழிலாளியான இவர் கடந்த 2013-ம் ஆண்டு லாரியில் இருந்து மரக்கட்டைகளை இறக்கும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இடது காலை அவர் இழந்தார். மனைவி மற்றும் 3 குழந்தைகளின் வாழ்வுக்காக அவர் லாட்டரி சீட்டு விற்கும் தொழிலில் ஈடுபட்டார். அவரது நிலை கண்டு கொண்டோட்டி அரசு கலைக்கல்லூரி பேராசிரியை சமீரா, உதவிக்கரம் நீட்டி உள்ளார். கண்ணன் வீடு கட்டவும் அவர் உதவி புரிந்துள்ளார்.
இஸ்லாமியரான அவர் நலம் பெற வேண்டி, சபரிமலைக்கு சக்கர நாற்காலியில் செல்ல கண்ணன் திட்டமிட்டு பயணத்தை தொடங்கி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
என்னுடைய வாழ்க்கையை மாற்றியவர் சமீரா ஆசிரியர். எனக்கும் என் குடும்பத்துக்கும் அவர் கடவுள் போன்றவர். அவரின் நலனுக்காக நான், கடந்த 15-ந் தேதி தடம்பரப்பா கிராமத்தில் இருந்து சபரிமலை பயணத்தை தொடங்கினேன். தினமும் காலை 6 மணிக்கு சக்கர நாற்காலியில் பயணத்தை தொடங்கி விடுவேன். மதியம் சபரிமலை யாத்ரீகர்கள் தங்கும் கோவில்கள் அல்லது அன்னதான கவுண்டர்களில் உணவருந்தி விட்டு ஓய்வெடுப்பேன். தொடர்ந்து மாலை 6 மணிக்கு பயணத்தை தொடரும் நான், இரவு 11 மணி வரை பயணம் செய்கிறேன். சமீரா ஆசிரியைக்காகவே இந்த பயணம். நான் மனதார அய்யப்பனை வேண்டிக்கொண்டால், அவருக்கு அருள் புரிவார் என்று உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில் கொண்டோட்டியில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய கண்ணன், சன்னிதானத்தை அடைய திட்டமிட்டுள்ளார். திரும்பும் அவர் தரிசனை முடித்துக்கொண்டு பஸ்சில் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.