காவல் நிலையத்தில் விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட திரிணாமுல் காங். தலைவர்கள்
|திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
புதுடெல்லி:
சி.பி.ஐ., அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமான வரித்துறை ஆகிய 4 மத்திய விசாரணை அமைப்புகளின் இயக்குநர்களை மாற்ற வேண்டும் எனக்கோரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என 10 பேர் கொண்ட குழுவினர், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று மனு கொடுத்தனர். பின்னர் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 24 மணி நேரம் தர்ணா போராட்டத்தை தொடர உள்ளதாக அறிவித்தனர்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி காவல்துறை தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. பலமுறை கோரிக்கை விடுத்தும் தலைவர்கள் ஏற்க மறுத்து தர்ணாவை தொடர்ந்ததால், அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தலைவர்கள் மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று இரவே திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை விடுவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், தலைவர்கள் இரவு முழுவதும் காவல் நிலைய வளாகத்தில் தங்கி தர்ணாவை தொடர்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பயன்படுத்துவதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.