மேற்கு வங்காளம்: திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவர் மீது துப்பாக்கி சூடு
|மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த பஞ்சாயத்து தலைவர் அனிமேஷ் ராய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள லால்பஜாரின் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் அனிமேஷ் ராய். இவர் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். ராய் நேற்று இரவு எப்போதும் போல தனது வேலை முடித்துவிட்டு தனது உதவியாளருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ராயை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவத்தில் ராயின் வலது தொடையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் ராயின் உதவியாளருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ராயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "லால்பஜாரின் பஞ்சாயத்து தலைவர் அனிமேஷ் ராயை நேற்று இரவு சில மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். ராய் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவரது நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.