மணிப்பூர் விவகாரம்: நாடாளுமன்ற முடக்கத்துக்கு பா.ஜனதாவே காரணம் - திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
|மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றம் முடங்குவதற்கு ஆளும் பா.ஜனதாவே காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மணிப்பூர் விவகாரம்
மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கொண்டு சென்றது மற்றும் மாநிலத்தில் நீடித்து வரும் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. இந்த அமளியால் மழைக்கால கூட்டத்தொடர் முதல் 2 நாட்களும் முடங்கியது. ஆனால் மணிப்பூர் பிரச்சினை குறித்து விவாதிக்க தயார் எனக்கூறி வரும் மத்திய அரசு, எதிர்க்கட்சிகள்தான் விவாதிக்காமல் இடையூறு ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி வருகிறது. இதனால் மணிப்பூர் விவகாரத்தில் இரு தரப்பும் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றன.
பிரதமர் தொடங்க வேண்டும்
இந்த நிலையில் நாடாளுமன்ற முடக்கத்துக்கு ஆளும் பா.ஜனதாவே காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அந்த கட்சி எம்.பி. டெரிக் ஓபிரையன் தனது டுவிட்டர் தளத்தில், 'நாடாளுமன்றத்தை பா.ஜனதா முடக்கி வருகிறது. மணிப்பூர் விவகாரத்தில் திங்கட்கிழமை (நாளை) காலை 11 மணிக்கு விவாதத்தை நாம் தொடங்குவோம். மக்களவையோ அல்லது மாநிலங்களவையோ, பிரதமர் மோடி விரும்பும் அவையில் அவர் விவாதத்தை தொடங்கி வைக்கட்டும். அந்த விவாதத்தில் கண்டிப்பாக நாங்கள் பங்கேற்போம்' என குறிப்பிட்டு உள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி அவைக்கு வர வேண்டும், மணிப்பூர் விவகாரத்தில் பதிலளிக்க வேண்டும் என கேட்டு அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.