< Back
தேசிய செய்திகள்
தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க முடியாது: மத்திய ஜல்சக்தி துறை மந்திரியிடம் டி.கே.சிவக்குமார் நேரில் வலியுறுத்தல்
தேசிய செய்திகள்

தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க முடியாது: மத்திய ஜல்சக்தி துறை மந்திரியிடம் டி.கே.சிவக்குமார் நேரில் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
15 Sept 2023 12:15 AM IST

ஜெய்ப்பூரில் மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நேரில் சந்தித்து, சித்தராமையா எழுதியுள்ள கடிதத்தை வழங்கினார். மேலும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்றும், காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பெங்களூரு:

காவிரி நீர் தொடர்பாக கர்நாடகம்-தமிழகம் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவிரி நீரை தமிழகத்திற்கு திறக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அதன் மீது விசாரணை நடக்கிறது. இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு கடந்த 12-ந் தேதி தமிழகத்திற்கு மேலும் 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் காவிரி நீர் திறக்கும்படி பரிந்துரை செய்துள்ளது.

இதற்கு கர்நாடகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய சித்தராமையா தமிழகத்திற்கு இனி காவிரி நீா் திறக்க இயலாது என்று கூறினார். மேலும் கர்நாடக அணைகளில் குறைவான நீர் இருப்பதாகவும், இது குடிநீருக்கே போதாது என்றும், எனவே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத இருப்பதாகவும், இதுபற்றி காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம், சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இந்த நிலையில் கர்நாடக நீர்ப்பாசனத்துறையை வகிக்கும் துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு சென்றார். அங்கு அணைகள் பாதுகாப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கில் அவர் கலந்துகொண்டார்.

அந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷொகவத்தை டி.கே.சிவக்குமார் நேற்று தனியாக சந்தித்து பேசினார். அப்போது கர்நாடக அணைகளின் நீர் இருப்பு குறித்து விளக்கி கூறியதுடன், தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் என கூறியுள்ள காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையை அமல்படுத்த முடியாது என தெரிவித்தார். மேலும் முதல்-மந்திரி சித்தராமையா அவருக்கு எழுதியுள்ள கடிதத்தை டி.கே.சிவக்குமார் வழங்கினார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் காவிரி படுகையில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் அணைகள் நிரம்பவில்லை. நடப்பு ஆண்டில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் இதுவரை 104 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் மட்டுமே கிடைத்துள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளின் சராசரியுடன் ஒப்பிடுகையில் 50 சதவீதத்திற்கும் மேல் குறைவு ஆகும்.

காவிரி படுகையில் நடப்பு ஆண்டில் 58.93 சதவீதம் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. கர்நாடகத்திற்கு குடிநீர், பாசனம், தொழில் நிறுவனங்களுக்கு 103 டி.எம்.சி. தேவைப்படுகிறது. தமிழகம் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் கடந்த 11-ந் தேதி வரை 92 நாட்களில் 99 டி.எம்.சி. நீரை பயன்படுத்தியுள்ளது. தமிழகம் 5.60 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிர் சாகுபடி செய்துள்ளதாக சொல்கிறது. இது தவறு.

வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு இயல்பான அளவில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த பருவமழை கர்நாடகத்தில் பெய்யாது. இதனால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளின் கீழ் பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு 60 டி.எம்.சி. நீர் கிடைக்கும். மேட்டூர் அணையில் தற்போது 24 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. தனது தேவைகளுக்கு தமிழகத்திடம் போதிய நீர் உள்ளது.

காவிரி ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளை கர்நாடகம் இதுவரை பின்பற்றி தமிழகத்திற்கு நீர் திறந்துவிட்டது. காவிரி படுகையில் போதிய மழை பெய்யாததால், பெரும்பாலான தாலுகாக்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு மேலும் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி உத்தரவிட்டு இருப்பதை அமல்படுத்த முடியாது.

ஏனெனில் மக்கள், கால்நடைகளுக்கு குடிநீர் மற்றும் விவசாயிகளுக்கு பாசனத்திற்கு நீர் தேவைப்படுகிறது. அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியாது. அதனால் காவிரி மேலாண்மை ஆணையத்தில், ஒழுங்காற்று குழுவின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதன் மூலம் கர்நாடக விவசாயிகள், மக்களின் நலன் காக்க முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்