திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆனந்த நிலையம் கோபுரத்திற்கு தங்க முலாம் பூச தேவஸ்தானம் முடிவு
|ஆனந்த நிலையம் விமான கோபுரத்திற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தங்க முலாம் பூச தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூலவர் எழுந்தருளியிருக்கும் கோவில் கருவறையின் பெயர் ஆனந்த நிலையம் ஆகும். இந்த ஆனந்த நிலையம் மீது அமைக்கப்பட்டுள்ள தங்க கோபுரத்தின் பெயர் ஆனந்த நிலை விமானம் ஆகும்.
தொண்டைமான் சக்கரவர்த்தி கட்டியதாக கூறப்படும் ஆனந்த நிலைய விமானத்திற்கு கி.பி. 839-ம் ஆண்டு பல்லவ அரசரான விஜயதந்தி விக்ரம வர்மா முதலில் தங்க கவசம் அமைத்துள்ளார். அதன் பின்னர் 13-ம் நூற்றாண்டில் சதவர்ம சுந்தர பாண்டிய தேவன், 16-ம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயர் என இடைப்பட்ட காலத்தில் பல்வேறு மன்னர்கள் ஆனந்த நிலைய விமானத்திற்கு தங்க முலாம் பூசி திருப்பணி செய்துள்ளனர்.
இதையடுத்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஏற்பட்ட பின் 1958-ம் ஆண்டு ஆனந்த நிலைய விமானம் மீது இருந்த பொன் முலாம் பூசப்பட்ட தகடுகள் அகற்றப்பட்டு 12 டன் எடையுள்ள புதிய செம்பு தகடுகள் பொருத்தப்பட்டன. மேலும் 12 ஆயிரம் துலாம் எடையுள்ள தங்கத்தை பயன்படுத்தி 18 லட்சம் ரூபாய் செலவில் ஏழுமலையான் கோவில் கோபுரத்திற்கு பொன் முலாம் பூசப்பட்டது.
இந்த நிலையில் ஆனந்த நிலையம் விமான கோபுரத்திற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தங்க முலாம் பூச தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. இந்த பணிக்கு பக்தர்கள் திருப்பதி கோவில் உண்டியலில் செலுத்திய தங்கம் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.