< Back
தேசிய செய்திகள்
தலித்-பழங்குடியினர் சமூகங்களுக்கான இடஒதுக்கீடு குறித்த சட்ட மசோதா பற்றி விவாதிக்க நேரம் ஒதுக்கப்படும்; சபாநாயகர் காகேரி தகவல்
தேசிய செய்திகள்

தலித்-பழங்குடியினர் சமூகங்களுக்கான இடஒதுக்கீடு குறித்த சட்ட மசோதா பற்றி விவாதிக்க நேரம் ஒதுக்கப்படும்; சபாநாயகர் காகேரி தகவல்

தினத்தந்தி
|
21 Dec 2022 2:19 AM IST

தலித்-பழங்குடியினர் சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு சட்ட மசோதா குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கப்படும் என்று சபாநாயகர் காகேரி கூறினார்.

பெலகாவி:

அவசர சட்டம்

கர்நாடக சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, 'தலித் மற்றும் பழங்குடியின சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்க அனுமதி வழங்க வேண்டும்' என்று கோரினார். இந்த விஷயம் குறித்து பல்வேறு உறுப்பினர்கள் பேச விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, 'தலித்-பழங்குடியின சமூகத்திற்கு இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவசர சட்டத்தை ஏற்கனவே பிறப்பித்துள்ளோம். இதற்கு கவர்னர் அனுமதி வழங்கினார். அந்த அவசர சட்டத்திற்கு பதிலாக இந்த சட்ட மசோதாவை நாங்கள் தாக்கல் செய்துள்ளோம். இதில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம். இதுகுறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது' என்றார்.

சட்ட மசோதாக்கள்

அப்போது சட்டத்துறை மந்திரி மாதுசாமி குறுக்கிட்டு, 'இந்த சட்டம் குறித்து விவாதம் நடைபெறட்டும். அத்துடன் இன்னும் சில சட்ட மசோதாக்கள் உள்ளன. அவற்றையும் அதனுடன் விவாதத்திற்கு எடுத்து கொள்ள வேண்டும்' என்றார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது பேசிய சபாநாயகர் காகேரி, தலித்-பழங்குடியின சட்டம் குறித்து விவாதிக்க தனியாக நேரம் ஒதுக்குவதாக அறிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், 'அந்த சட்ட மசோதா குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம். இதை காங்கிரஸ் தான் எதிர்க்கிறது. தாங்கள் செய்யாததை பா.ஜனதா செய்துள்ளதால் காங்கிரசாருக்கு வயிற்றெரிச்சல்' என்றார்.

சட்டத்தை எதிர்க்கவில்லை

கோவிந்த் கார்ஜோளின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து பேசிய சித்தராமையா, 'நாங்கள் இந்த சட்டத்தை எதிர்க்கவில்லை. அனைத்துக்கட்சி கூட்டத்தில் எங்களின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவித்தோம். இதற்கு தேவையான ஆலோசனையும் கூறியுள்ளோம். நாங்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் அல்ல. இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். மண்டல் கமிஷனின் பரிந்துரைக்கு எதிராக செயல்பட்டவர்கள் யார்?. இட ஒதுக்கீட்டிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்றவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்' என்றார்.

மேலும் செய்திகள்