பழைய சவால்களை விட்டுவிட்டு புதிய வாய்ப்புகளை பயன்படுத்துங்கள்- இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
|ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் 3 ஆயிரம் பேருக்கு மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்கான பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் கூறியதாவது:-
ஜம்மு காஷ்மீர் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற இருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 21ஆம் நூற்றாண்டின் இந்தப் பத்தாண்டு ஜம்மு காஷ்மீர் வரலாற்றில் மிக முக்கியமான தசாப்தமாகும். இந்த பணி வாய்ப்பின் மூலம், மாநில மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது.
பழைய சவால்களை நீங்கள் புறம்தள்ளிவிட்டு, புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான நேரம் தற்போது உங்களுக்கு வாய்த்திருக்கிறது.
புதிய அணுகுமுறை, புதிய சிந்தனை ஆகியவற்றின் மூலம் வளர்ச்சிக்கான வேகத்தை அதிகப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 2019 முதல் இதுவரை ஜம்மு காஷ்மீரில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இவற்றில் கடந்த 1-1.5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20,000 வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் புதிய வளர்ச்சிக்கான வரலாற்றை இளைஞர்கள் படைக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.