ஒவ்வொரு துறையிலும் இந்தியா முதலிடம் பெறுவதை யாரும் தடுக்க முடியாது - அமித்ஷா உறுதி
|அமுத காலத்தில் இந்தியா ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பெறுவதை யாரும் தடுக்க முடியாது என்று அமித்ஷா கூறினார்.
புதுடெல்லி, செப்.30-
அமுத காலத்தில் இந்தியா ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பெறுவதை யாரும் தடுக்க முடியாது என்று அமித்ஷா கூறினார்.
அரசியல் நிலைத்தன்மை
டெல்லியில், தொழில் மற்றும் வர்த்தக சபையின் 118-வது வருடாந்திர கூட்டம் நடந்தது. அதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரையிலான காலம், நாட்டையே ஆட்டி வைத்து விட்டது. அரசியல் நிலையற்ற தன்மையின் கடைசி காலம் அதுதான். கொள்கை சீர்குலைவும் ஏற்பட்டது.
ஆனால், 2014-ம் ஆண்டில் இருந்து கடந்த 9 ஆண்டு காலம், உறுதியான கொள்கைகளும், அரசியல் நிலைத்தன்மையும், ஜனநாயகமும் நிறைந்த காலமாக உள்ளது.
தனிநபர் வருமானம் உயர்வு
கடந்த 9 ஆண்டு காலம், செயல்பாடுகளின் பலனை பார்த்துள்ளது. பிரதமர் மோடி தலைமமையின் கீழ், நாட்டின் பொருளாதாரம் புதிய திசையை கண்டுள்ளது.
நமது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2 லட்சத்து 3 ஆயிரம் கோடி டாலரில் இருந்து 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. அதாவது, ஏறத்தாழ இரண்டு மடங்காகி விட்டது. தனிநபர் ஆண்டு வருமானம், ரூ.68 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில், ஒவ்வொரு துறையிலும் இந்தியாவை மாற்ற முயன்ற பிரதமர் மோடி, அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
யாரும் தடுக்க முடியாது
ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய பிறகு, வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் மட்டுமின்றி, ஒவ்வொரு துறையிலும் புதிய சக்தி பாய்ச்சப்பட்டுள்ளது. அனைவரும் புதிய வேகத்தை பார்த்து வருகிறார்கள்.
உலகம் முழுவதும் இந்தியா, துடிப்பான நாடாக பார்க்கப்படுகிறது. ஒரு நிறுவனம் தனது தளத்தை மாற்ற விரும்பினால், அதற்கு இந்தியாதான் உகந்ததாக இருக்கிறது.
நமது நாடு இளமையானது. இங்கு ஏராளமான என்ஜினீயர்கள், டாக்டர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளனர். இங்கு ஜனநாயகம் நிலவுகிறது. பிரதமர் மோடி தலைமையின்கீழ் கொள்கை உருவாக்கம் தெளிவாக உள்ளது. எனவே, நடப்பு அமுத காலத்தில், இந்தியா ஒவ்வொரு துறையிலும் முதல் இடத்தை கைப்பற்றுவதை யாரும் தடுக்க முடியாது.
உலகின் சிறந்த இடம்
அடுத்த 25 ஆண்டுகள், இந்திய தொழில் மற்றும் வர்த்தக துறைக்கு மிகவும் முக்கியமானது. இந்திய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களாக மாற வேண்டும். பெரிய தொழில்களுடன் சிறிய தொழில்களும் வலுப்படுத்தப்பட வேண்டும்.
மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையால், அடுத்த 10 ஆண்டுகளில், மாணவர்களுக்கு உலகிலேயே சிறந்த இடமாக இந்தியா மாறப்போகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.