ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய காலஅவகாசம்; இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது
|பெங்களூரு, புறநகர் மாவட்டங்களில் ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது
பெங்களூரு:
கர்நாடகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க உணவுத்துறை காலஅவகாசம் வழங்காமல் இருந்து வருகிறது. அதே நேரத்தில் ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய ஏற்கனவே ஒருமுறை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பி.பி.எல்.(வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்) ரேஷன் கார்டுகளில் பெயர்கள் மாற்றம், புதிய பெயர்களை சேர்த்தல், பெயர்களை நீக்குதல், முகவரி மாற்றுதல், குடும்ப தலைவிகளின் பெயர்களை சேர்த்தல் உள்ளிட்ட திருத்தங்கள் செய்ய உணவுத்துறை அவகாசம் வழங்கி உள்ளது. அதன்படி, பெங்களூரு மற்றும் பெங்களூரு புறநகர் மாவட்டங்களில் பி.பி.எல். ரேஷன் கார்டுகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) வரை 3 நாட்கள் காலஅவகாசம் வழங்கி உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு ஒன், கர்நாடக ஒன் மையங்களுக்கு சென்று ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 10 மணியில் இருந்து இரவு 7 மணிவரை அந்த மையங்கள் திறந்திருக்கும். இதுபோன்று, மற்ற மாவட்டங்களிலும் வருகிற நாட்களில் ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.