< Back
தேசிய செய்திகள்
தாத்தா-பேரனை கொன்ற ஆட்கொல்லி புலி பிடிபட்டது
தேசிய செய்திகள்

தாத்தா-பேரனை கொன்ற ஆட்கொல்லி புலி பிடிபட்டது

தினத்தந்தி
|
15 Feb 2023 12:15 AM IST

குடகு மாவட்டம் பொன்னம்பேட்டையில் தாத்தா-பேரனை கொன்ற ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் கும்கிகள் உதவியுடன் பிடித்தனர். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

குடகு:

குடகு மாவட்டம் பொன்னம்பேட்டையில் தாத்தா-பேரனை கொன்ற ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் கும்கிகள் உதவியுடன் பிடித்தனர். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

2 பேரை சொன்ற புலி

குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா பல்லேரி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, யானை,புலி போன்ற வன விலங்குகள் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த கிராமத்தில் சிறுத்தை மற்றும் புலிகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வனப்பகுதியொட்டிய விளை நிலங்களுக்கு செல்லவேண்டும் என்றால் உயிரை கையில் பிடித்து கொண்டுதான் செல்லவேண்டியிருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அந்த புலிகளின் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. நேற்று முன்தினம் பல்லேரி கிராமத்திற்குள் உள்ள காபி தோட்டத்திற்குள் புகுந்த புலி ஒன்று, அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த கூலி தொழிலாளிகளான சேத்தன் (18) மற்றும் அவரது தாத்தா ராஜூ (75) ஆகியோரை அடுத்தடுத்து தாக்கி கொன்றது. இந்த சம்பவத்தால் பல்லேரி கிராம மக்களிடையே பீதி ஏற்பட்டது.

மயக்க ஊசி செலுத்தி....

மேலும் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. வழக்கமாக கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளிகளும், வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். புலியை பிடித்தால் மட்டுமே வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதற்கிடையில் இந்த புலியை பிடிக்க கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன்படி வனத்துறை அதிகாரிகள் கூண்டுகள் வைத்து, மயக்க ஊசி செலுத்தியும் புலியை பிடிக்க திட்டமிட்டனர். இதற்காக பல்லேரி வனப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டிருந்தது. மற்றொரு புறம் 3 கும்கி யானைகளை வரவழைத்து அந்த சிறுத்தை புலியை தேடும் பணிகள் நடந்தது. கிடைத்தால் மயக்க ஊசி செலுத்திபிடித்துவிடலாம் என்ற முனைப்புடன் வனத்துறையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை அந்த புலி நானாச்சி கேட் என்ற பகுதியில் பதுங்கியிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அபிமன்யு, பீமா, அஸ்வதாமா ஆகிய கும்கி யானைகளுடன் அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் புலி பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது கும்கி யானைகளை பார்த்த புலி அங்கிருந்து தப்பியோட முயற்சித்தது.

பிடிபட்டது

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அந்த புலியை பிடிக்கும் நோக்கில், மயக்க ஊசியை குறி பார்த்து அதன் மீது செலுத்தினர். அந்த மயக்க ஊசி புலியின் மீது பட்டதும், அது திமர்பிடித்தப்படி அங்கிருந்து ஓடியது. இதை பார்த்த வனத்துறையினர் அந்த புலியை துரத்தி சென்றனர்.இந்நிலையில் சிறிது தூரம் சென்ற புலி,பின்னர் மயங்கி விழுந்தது.

இதையடுத்து அந்த புலியை மீட்ட வனத்துறை அதிகாரிகள், அதை கூண்டு ஒன்றில் அடைத்தனர். பின்னர் அந்த கூண்டை வாகனத்தில் ஏற்றி சென்று மைசூருவில் மிருககாட்சி சாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த புலியை விட்டனர். வனத்துறையினர் பிடித்த இந்த புலிக்கு 8 முதல் 9 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. 2 பேரை கொன்ற இந்த புலி பிடிப்பட்டதால் கிராம மக்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் வழக்கம்போல வேலைக்கு செல்ல தொடங்கினர்.

மேலும் செய்திகள்