ரெயிலிலும் லக்கேஜ்ஜூக்கு டிக்கெட் - மீறினால் 6 மடங்கு அபராதம்
|ரெயிலில் இனி கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
ரெயிலில் பயணம் செய்யும்போது இனி கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய கட்டுப்பாடுகளை இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது.
இந்தப் புதிய விதிகளின்படி, பயணிகள் ரெயில் வகுப்புகளைப் பொறுத்து 35 முதல் 70 கிலோ வரை லக்கேஜை இலவசமாகக் கொண்டுசெல்லலாம். அதன்படி, ஏசி முதல் வகுப்பில் பயணிப்பவர்கள் 70 கிலோ வரை லக்கேஜையும் ஏசி இரண்டாம் வகுப்பில் பயணிப்பவர்கள் 50 கிலோ வரை லக்கேஜையும் இலவசமாக எடுத்துச்செல்லலாம்.
ஏசி மூன்றாம் வகுப்பு மற்றும் ஸ்லீப்பரில் பயணிப்பவர்கள் 40 கிலோ வரையிலும், இரண்டாம் வகுப்பில் பயணிப்பவர்கள் 35 கிலோ வரையிலும் இலவசமாக லக்கேஜை கொண்டு செல்லலாம்.
மேலும் அதிகபட்சமாக ஏசி முதல் வகுப்பில் பயணிப்பவர்கள் 150 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச் செல்லலாம். ஸ்லீப்பரில் பயணிப்பவர்கள் அதிகபட்சமாக 80 கிலோ வரையிலும் இரண்டாம் வகுப்பில் பயணிப்பவர்கள் 70 கிலோ வரையிலும் லக்கேஜ் எடுத்துச் செல்லலாம்.
அனுமதிக்கப்பட்ட எடைக்கு மேல் பயணிகள் கூடுதல் லக்கேஜ் கொண்டு செல்லும் போது பிடிபட்டால் எடைக்கான கட்டணத்தை விட 6 மடங்கு கூடுதல் தொகையை அபராதமாக கட்ட வேண்டி இருக்கும் என்றும் ரெயில்வே துறை எச்சரித்துள்ளது. லக்கேஜ்களுக்கு குறைந்தபட்ச கட்டணமாக 30 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்ல விரும்புவோர் ரெயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் லக்கேஜ் புக்கிங் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அதேபோல், ரெயில் டிக்கெட் முன்பதிவின் போதும் பயணிகள் கூடுதல் லக்கேஜூக்கு கட்டணம் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.