பிரதமர் மோடி கான்வாய் மீது செருப்பு வீசிய சம்பவம் கண்டிக்கத்தக்கது - ராகுல்காந்தி
|அரசின் கொள்கைகளுக்கு எதிரான கண்டனத்தை காந்திய வழியில் பதிவு செய்ய வேண்டும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
3-வது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நேற்று முதல் முறையாக வாரணாசி தொகுதிக்கு சென்றார். அப்போது பிரதமரின் கான்வாய் நெரிசலான சாலை வழியாக சென்றபோது பிரதமர் மோடியின் குண்டு துளைக்காத கார் மீது செருப்பு வீசப்பட்டது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் மோடி கான்வாய் மீது செருப்பு வீசிய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது அவரது பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள கடுமையான குறைபாடு.
அரசின் கொள்கைகளுக்கு எதிரான கண்டனத்தை காந்திய வழியில் பதிவு செய்ய வேண்டும்; ஜனநாயகத்தில் வன்முறைக்கும், வெறுப்புக்கும் இடமில்லை" என்று தெரிவித்துள்ளார்.