பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
|பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ராய்ப்பூர்,
சத்தீஸ்கர், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் பிஜபூர் மாவட்டத்தில் தெலுங்கானா மாநில எல்லையை ஒட்டிய புஜரி கங்கர் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தெலுங்கானா பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சத்தீஸ்கர் போலீசாருடன் இணைந்து தெலுங்கானா போலீசார் புஜரி கங்கர் வனப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் திடீர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, போலீசார் நடத்திய பதிலடி துப்பாக்கிச்சூட்டில் 3 நக்சலைட்டுகள் உயிரிழந்தனர்.
என்கவுண்ட்டர் நடைபெற்ற பகுதியில் மேலும் சில நக்சலைட்டுகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் அப்பகுதியில் போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.