< Back
தேசிய செய்திகள்
காஷ்மீர் என்கவுண்டர்; 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி

Image Courtesy: PTI

தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுண்டர்; 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி

தினத்தந்தி
|
10 Aug 2022 2:25 PM GMT

கொல்லப்பட்ட பயங்கராவதிகளில் ஒருவன் காஷ்மீரில் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியராக பணியாற்றி வந்த ராகுல் பட்டை சுட்டுக்கொன்ற பயங்கரவாதியாகும்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் பட்கம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அந்த மாவட்டத்தின் கான்ஷகிப் பகுதியில் உள்ள வாட்டர்ஹில்ஸ் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புபடையினரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புபடையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்புக்கும் இடையே பலமணி நேரம் துப்பாக்கிச்சண்டை நீடித்தது. இந்த சண்டையின் இறுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் 3 பேரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் லெடிஃப் ரதர் என்ற பயங்கரவாதியும் அடக்கம். இந்த பயங்கரவாதி, கடந்த மே மாதம் 12-ம் தேதி பட்கம் மாவட்டம் சந்தூரா பகுதியில் உள்ள தாசில் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கு வருவாய்த்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த இந்து மதத்தை சேர்ந்த ராகுல் பட் என்ற காஷ்மீரி பண்டிட்டை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றான். அதேபோல், பயங்கரவாத லெடிஃப்ரதர் மே 25-ம் தேதி பட்கம் மாவட்டம் ஹிஷோரோ பகுதியில் வசித்து வந்த டி.வி சீரியல் நடிகை அம்பிரீம் வீட்டிற்குள் புகுந்து அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றார்.

தப்பிச்சென்ற பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் தேடி வந்த நிலையில் இன்று நடந்த என்கவுண்டரில் லெடிஃப் ரதர் உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்