பீகார் மாநிலம் கோபால்கஞ்சில் நடைபெற்ற விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி
|பீகார் மாநிலம் கோபால்கஞ்சில் நடைபெற்ற விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர்
பாட்னா,
பீகார் மாநிலம் கோபால்கஞ்சில் நேற்று நடைபெற்ற ராஜா தல் பந்தல் விழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விழாக்களில் பங்கேற்க மக்கள் குவிந்ததால் பந்தலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கூட்டம் கூடியபோது, ஒரு துரதிர்ஷ்டவசமான நெரிசல் ஏற்பட்டது, இதனால் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டன. இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட தகவல்களின்படி இந்த சம்பவம் இரவு 8.30 மணியளவில் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. நகர் தானா எல்லைக்கு உட்பட்ட ரெயில்வே ஸ்டேஷன் ரோடு அருகே, ராஜ தள பூஜை பந்தளத்தில் இந்த சோகம் அரங்கேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மாஜிஸ்திரேட் டாக்டர் நவல் கிஷோர் சவுத்ரி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்வர்ன் பிரபாத் ஆகியோர் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மூன்று இறப்புகளை காவல்துறை கண்காணிப்பாளர் உறுதிப்படுத்தினார்.
இதுகுறித்து கோபால்கஞ்ச் மாவட்ட மாஜிஸ்திரேட் நவல் கிஷோர் சவுத்ரி கூறுகையில், "இன்று துர்கா நவமி என்பதால் மாநிலத்தில் பல இடங்களில் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த விழா பந்தலில் கூட்ட நெரிசலுகிடையே ஒரு குழந்தை விழுந்தது, அவரைக் காப்பாற்ற முயன்ற இரண்டு பெண்களும் கீழே விழுந்தனர். அவர்களால் எழுந்திருக்க முடியவில்லை. அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் போதே அவர்கள் உயிரிழந்தனர்... நாங்கள் சம்பவ இடத்திலேயே இருக்கிறோம், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது" என்று அவர் கூறினார்.