கேரளாவில் கடும் வெயில்: கிரிக்கெட் விளையாடிய வாலிபர் உள்பட 3 பேர் பலி
|கேரள மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தொடர்ந்து உயிர்பலி அதிகரித்து வருகிறது.
திருவனந்தபுரம்,
கேரளா மற்றும் தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. மார்ச் மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கும் நிலையில், கேரள மாநிலத்தில் பாலக்கோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பநிலை 104 டிகிரிக்கும் மேல் உள்ளது. கடும் வெயில் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் மாநிலங்களில் இந்த ஆண்டு கேரளாவும் இடம் பெற்றுள்ளது.
இதற்கிடையே கேரள மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக உயிர்பலி அதிகரித்து வருகிறது. கடந்த 26-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நாளில் வாக்களிக்க வந்த வாக்காளர்களில் பூத் ஏஜெண்ட் உள்பட 10 பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். அதைதொடர்ந்து பொது இடங்களுக்கு வந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் கடும் வெயில் காரணமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 பேர் இறந்துள்ளனர். அதாவது, பாலக்காடு மாவட்டத்தில் மட்டும் கட்டிட மற்றும் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். கோட்டயத்தில் ஷமீர் (வயது 35) என்பவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் திடீரென சுருண்டு விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். கேரளாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.