ஓரின சேர்க்கையாளர்களுக்குள் வன்முறை: 2 ஆண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் - 3 பேர் கைது
|டெல்லியில் 2 ஆண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக ஓரின சேர்க்கையாளர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி,
டெல்லியில் 2 ஆண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக ஓரின சேர்க்கையாளர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
வங்காளதேசத்தைச் சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர் டெல்லியில் படித்து வருகிறார். இவரும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது வாலிபரும் ஒரே அறையில் தங்கியுள்ளனர். வங்காளதேச மாணவர் ஓரினச்சேர்க்கையில் விருப்பம் உள்ளவர் என கூறப்படுகிறது. இது நிமித்தமாக அவர் ஓரினச் சேர்க்கையாளர்களின் 'டேட்டிங்' செயலியில் உறுப்பினர் ஆனார். அதில் தனக்கு பிடித்த ஒரு நபரை நண்பராக்கிக் கொண்டார். அவர்கள் நெருக்கமாகி விட்டனர்.
இதற்கிடையே, வங்காளதேச மாணவரின் நண்பர் ஒருவர் வங்காள தேசத்தில் இருந்து டெல்லி வந்து அவருடன் தங்கிக்கொண்டார். அவரும் ஓரினச்சேர்க்கையில் விருப்பம் கொண்டவர். இந்த நிலையில் வங்காள தேசத்துக்காரர்கள் 2 பேரும் டெல்லி சக்குர்பூர் பகுதியில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்வுக்கு இரவில் சென்றனர். பின்னர் அங்கிருந்து நள்ளிரவில் வீடு திரும்பினர். அப்போது வங்காளதேச மாணவரின் 'டேட்டிங்' செயலி நண்பர் அங்கு வந்தார். அவர் வங்காளதேசத்து மாணவரை உறவுக்கு அழைத்தார். ஆனால் அவருக்கு விருப்பம் இல்லாமல் போகேவே, தன்னோடு வந்த தன் நண்பரை அனுப்பி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் அருகில் உள்ள பூங்காவின் புதருக்குள் சென்றனர். இதற்கிடையே 'டேட்டிங்' செயலி நபரின் நண்பர்கள் 4 பேர் அடுத்தடுத்து அங்கு வந்தனர். பின்னர் 5 பேரும் சேர்ந்து வங்காளதேசத்து மாணவர் மற்றும் வாலிபரை அடித்து உதைத்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட 2 பேரும் தங்களது அறைக்கு வந்து பீகார் வாலிபரிடம் நடந்தவற்றை கூறினர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே குற்றவாளிகளைப் பிடிக்க 20 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள 50 கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்தி சுர்ஜித் (வயது 21), தேவாசிஷ் வர்மா (20), ஆர்யன் (20) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
ஆண்கள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.