கனடாவில் இந்திய தூதர்களுக்கு மிரட்டல்; நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
|கனடாவில் இந்திய தூதரகங்கள் மீது புகை குண்டுகளை வீச கூடிய அளவுக்கு காலிஸ்தானிய சக்திகளுக்கு இடம் அளிக்கப்பட்டு உள்ளது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
புதுடெல்லி,
கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்திய தூதர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் உள்ளிட்ட சம்பவங்களுக்கு இந்தியா கண்டனம் வெளியிட்டு உள்ளது. இதுபற்றி மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் தனியார் ஊடகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், சான் பிரான்சிஸ்கோ நகரில் எங்களுடைய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என நம்புகிறோம். லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்குள் புகுந்த நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
எங்களுடைய தூதர்களை, கனடாவில் மிரட்டிய நபர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறினார். கடந்த ஆண்டு மார்ச் 19-ந்தேதி காலிஸ்தானிய ஆதரவு சமூக விரோதிகள் சிலர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தினர். கடந்த ஜூலையில், சான் பிரான்சிஸ்கோ நகரில் எங்களுடைய தூதரகம் மீது தீ வைக்க முயற்சி நடத்தப்பட்டது.
கடந்த செப்டம்பரில், கனடாவில் எங்களுடைய தூதர்கள் அப்போது பணிக்கு பாதுகாப்பாக செல்ல முடியாத சூழல் காணப்பட்டது. அதனால், கனடா குடிமக்களுக்கான விசாக்கள் வழங்குவதில் தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்திய தூதர்கள் அச்சுறுத்தப்பட்டு வந்தனர். பல வழிகளில் அவர்கள் மிரட்டப்பட்டனர். அப்போது, கனடா அரசிடம் இருந்து சிறிய அளவிலேயே ஆதரவு கிடைத்தது என கூறினார்.
கனடாவில் காலிஸ்தானிய சக்திகளுக்கு எந்தளவுக்கு இடம் அளிக்கப்பட்டு உள்ளது என்பது பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், கனடாவில் இந்திய தூதரகங்கள் மீது புகை குண்டுகளை வீச கூடிய அளவுக்கு உள்ளது என கூறினார். பேச்சு சுதந்திரம், ஜனநாயகம் உள்ளது என்று கூறிவிட்டு, பணியை செய்து வரும் தூதர்களை அச்சுறுத்துவது என்பது அதனை தவறாக பயன்படுத்தும் விசயம் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், அந்த விசயம் சரிசெய்யப்பட்டு உள்ளது. கனடாவில், எங்களுடைய விசா நடைமுறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டன. நிலைமை மேம்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.
இதேபோன்று, இங்கிலாந்திலும் நிலைமை மேம்பட்டு உள்ளது என கூறிய அவர், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிலும் உறுதியான எதிர்வினை கிடைத்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.