தொலைபேசி வழியே கொலை மிரட்டல் அழைப்புகள்; சுவப்னா சுரேஷ்
|கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சுவப்னா சுரேஷ் தனக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் அழைப்புகள் வருகின்றன என கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக கடத்தப்படவிருந்த ரூ.14.82 கோடி மதிப்புள்ள தங்கம், இரண்டாண்டுகளுக்கு முன்பு மத்திய சுங்கத்துறை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர், சரித்குமார், சுவப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் சமீபத்தில் சுவப்னா சுரேஷ் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதில், முதல்-மந்திரி பினராயி விஜயன், முன்னாள் முதன்மை செயலாளர் எம். சிவசங்கர் மற்றும் இந்த வழக்கில் முதல் மந்திரியின் மனைவி கமலா, மகள் வீணா, முதல்வரின் முன்னாள் தனி செயலாளர் சி.எம். ரவீந்திரன், முன்னாள் மந்திரி கே.டி. ஜலீல், நளினி நெட்டோ ஆகியோருக்கு தங்க கடத்தல் வழக்கில் தொடர்பு உள்ளது என்றும் அவர்கள் என்னென்ன செய்துள்ளனர் என்பது பற்றியும் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.
இதுகுறித்து விளக்கம் அளித்த பினராயி விஜயன் தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இது அவர்களின் அரசியல் சூழ்ச்சியின் ஒரு பகுதி தான். பொதுமக்கள் இத்தகைய அரசியல் சூழ்ச்சியை ஏற்கெனவே புறக்கணித்தவர்கள் என்பது நினைவில் கொள்ள வேண்டும். சில குற்றவாளிகள் மூலம் இந்த குற்றச்சாட்டை அடிக்கடி முன்வைத்து அரசியல் செய்து வருகின்றனர் என கூறினார்.
இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, நேற்றைய நாளில் இருந்து மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன. இது நேரடியான மிரட்டல். கேரளா முதல்-மந்திரி, அவரது மனைவி, மகள் மற்றும் எம்.எல்.ஏ. கே.டி. ஜலீல் ஆகியோரின் பெயர்களை பற்றி பேச கூடாது என வலியுறுத்துகின்றனர். மராடு அனீஷ் என்ற பெயரில் சிலர் இதுபோன்று செய்து வருகின்றனர்.
இதுபற்றி டி.ஜி.பி.க்கு நான் புகார் அளித்து உள்ளேன். அவர்கள் என்னை கொல்வோம் என அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். நவ்ஃபால் என்ற பெயரில் மற்றொரு நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எம்.எல்.ஏ. கே.டி. ஜலீல் உத்தரவின்படியே நான் பேசுகிறேன் என என்னிடம் கூறினார் என்று அவர் கூறியுள்ளார்.