சொத்து விவகாரத்தில் சகோதரிக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் மீது வழக்கு
|சொத்து விவகாரத்தில் சகோதரிக்கு கொலை மிரட்டல் பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உடுப்பி-
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா மூட்லகட்டை பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திரா. இவரது மனைவி சுமாணா. இவர் அமெரிக்காவில் உணவகம் நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கோணி வாசுதேவா என்பவருக்கு சொந்தமான 70 சென்ட் நிலத்தை சுமாணா வாங்கினார்.
அந்த நிலத்தை தனது தங்கை ரோகிணி பெயரில் சுமாணா பத்திரப்பதிவு செய்துள்ளார். மேலும் அந்த இடத்தில் ரூ.65 லட்சத்தில் அவர் வீடும் கட்டி உள்ளார். இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுமாணா அமெரிக்காவில் இருந்து உடுப்பி வந்தார். இதையடுத்து ரோகிணியிடம் உனது பெயரில் உள்ள சொத்தை எனது பெயருக்கு மாற்ற வேண்டும் என சுமாணா கூறினார்.
மேலும் ரோகிணியிடம் கொடுத்த நகைகளையும் அவர் கேட்டுள்ளார். அப்போது ரோகிணி நகைகள் மற்றும் சொத்துகளை உனது பெயருக்கு மாற்றி தரமுடியாது என சுமாணாவிடம் கூறியுள்ளார். மேலும் அவருக்கு ரோகிணி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து உடுப்பி புறநகர் போலீசில் சுமாணா புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் ரோகிணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.