குழந்தை திருமணம் செய்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்படுவார்கள்..!! அசாம் முதல்-மந்திரி அதிரடி
|குழந்தை திருமணத்தை தடுக்கும் நடவடிக்கையில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்படுவார்கள் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்
திஸ்பூர்,
அசாம் மாநிலத்தில் குழந்தைத் திருமணம் செய்த ஆயிரக்கணக்கான ஆண்கள் அடுத்த ஒரே வாரத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வ சர்மா அறிவித்துள்ளார். குழந்தை திருமணத்திற்கு எதிராக அவரது அரசாங்கம் தொடங்கியுள்ள ஒடுக்குமுறையின் பின்னணியில் அவரது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக பேசிய அவர், "அடுத்த 6-7 நாட்களில், 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் ஆண்கள் கைது செய்யப்படுவார்கள். அதேபோல் 14 வயதிற்கும் குறைவான சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்" என்று பிஸ்வ சர்மா கூறினார்.
இந்தியாவில் பெண்ணின் திருமண வயது 18. ஆணின் திருமண வயது 21. இருந்தும் நாடு முழுவதும் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக உள்ளன. தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி, அசாமில் 15 வயது முதல் 19 வயது வரையிலான பெண்களில் 11.7 சதவீதம் பேர் கருவுற்றுவிடுகின்றனர். அசாமில் நிறைய மாவட்டங்களில் பெண்களுக்கு 18 வயதிற்கு முன்னதாக திருமணம் செய்வது மிக சாதாரணமான நிகழ்வாக உள்ளது. இந்நிலையில்தான் அசாம் அரசு குழந்தை திருமணங்கள் தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக்கி உள்ளது.
முன்னதாக அசாம் முதல்-மந்திரி தனது டுவிட்டர் பக்கத்தில் குழந்தைத் திருமணம் குறித்த புள்ளி விவரங்கள் முதல் தடுப்பு நடவடிக்கை வரை பதிவிட்டிருந்தார்.