< Back
தேசிய செய்திகள்
எனக்கு எதிராக சதியில் ஈடுபடுகிறவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்-மந்திரி செலுவராயசாமி அறிக்கை
தேசிய செய்திகள்

எனக்கு எதிராக சதியில் ஈடுபடுகிறவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்-மந்திரி செலுவராயசாமி அறிக்கை

தினத்தந்தி
|
8 Aug 2023 9:43 PM IST

போலி கடிதத்தின் பின்னணியில் இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி கூறியுள்ளார்.

பெங்களூரு:-

விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி பெங்களூருவில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சதி செய்கிறார்கள்

எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள். அவர்களின் பெயரை சொல்ல விரும்பவில்லை. அது யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் எனக்கு எதிராக சதியில் ஈடுபடும் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். நமது நாடு விவசாயத்தை பிரதானமாக கொண்ட நாடு. இங்கு 70 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியுள்ளனர். இத்தகைய முக்கியமான துறையில் சேவையாற்ற அரசியல் ரீதியாக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நானும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். மந்திரி பதவியை பயன்படுத்தி விவசாயிகளுக்கு நேர்மையான முறையில் என்ன சேவைகளை செய்ய முடியுமோ அதை செய்ய நான் முயற்சி செய்கிறேன். ஆனால் ஏதாவது செய்து என்னை அரசியல் ரீதியாக ஒழித்துக்கட்ட சிலர் திட்டமிட்டு சதி செய்து வருகிறார்கள். மக்கள் அரசியல் குறித்து தெளிவான பார்வையை கொண்டுள்ளனர்.

பழிவாங்கும் நோக்கம்

அதனால் எனக்கு எதிராக சதி செய்கிறவர்கள் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்படுவது ஒரு வழக்கமான நடைமுறை. இந்த பணி இடமாற்றல் விஷயத்தில் நான் அதிக கவனம் செலுத்தவில்லை.

எனக்கு எதிராக பழிவாங்கும் நோக்கத்தில் ஏதாவது செய்து எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். எனக்கு எதிராக போலி கடிதத்தை உருவாக்கி ஊழியர்கள் பெயரில் சதி செய்கிறார்கள். இந்த போலி கடிதத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கு எதிராக செய்யப்படும் சதிகள் குறித்து மக்களுக்கு நன்றாக தெரியும்.

மறைமுக அரசியல்

நேரடியாக என்னை எதிர்கொள்ள முடியாதவர்கள் இவ்வாறு மறைமுகமாக அரசியல் செய்கிறார்கள். விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையான திட்டங்களை செயல்படுத்த நான் ஆலோசித்து வருகிறேன்.

இவ்வாறு செலுவராயசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்