பெண்களிடம் தவறாக நடப்பவர்கள் தூக்கில் போடப்படுவார்கள்: மத்திய பிரதேச முதல்-மந்திரி பேச்சு
|பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 17-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், வேட்பாளர் அறிவிப்பு, பிரசாரம் உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், நவராத்திரியை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளும் பா.ஜ.க.வின் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
அவர் பேசும்போது, மகள்கள் மற்றும் சகோதரிகளுடன் தவறாக நடந்து கொள்பவர்கள் தப்ப முடியாது என்று கூறினார். தேவைப்பட்டால், அதுபோன்ற சம்பவங்களில் தொடர்புடைய நபர்களின் சொத்துகள் புல்டோசர்களை கொண்டு இடித்து தள்ளப்படும் என்று பேசினார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மத்திய பிரதேசத்தில் அதிகரித்து வருகின்றன என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. சமீபத்தில் உஜ்ஜைன் நகரில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு பா.ஜ.க. அரசை, காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியிருந்தது.
அக்கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவரான ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்று குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தனர்.
இந்நிலையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை கைப்பற்றினால், பெண்களிடம் தவறாக நடப்பவர்கள் தூக்கில் போடப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.