நாட்டை பாதுகாக்கும் வீரர்களை நாம் மறந்துவிடக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
|கடந்த சில நாட்களுக்கு முன் பாதுகாப்புப்படையை சேர்ந்த 4 வீரர்களை நாம் இழந்துள்ளோம் என்று அவர் கூறினார்.
டெல்லி,
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் பங்கேற்றார்.
நிகழ்ச்சியின்போது பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், கடந்த சில நாட்களுக்கு முன் நமது பாதுகாப்புப்படையை சேர்ந்த 4 வீரர்களை நாம் இழந்துள்ளோம். நாம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும்போது, இந்த குளிரில் எல்லையில் பணிபுரிந்து நம்மையும், நம் நாட்டையும் பாதுகாக்கும் வீரர்களை நாம் மறந்துவிடக்கூடாது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நாம் பாட்டு படிக்கும்போது, பாதுகாப்புப்படையினருக்காகவும் பாடவேண்டும். பாதுகாப்புப்படையினரால்தான் பண்டிகைகளை நாம் நம் குடும்பத்தினருடன் கொண்டாட முடிகிறது' என்றார்.
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படையை சேர்ந்த 4 வீரர்கள் வீரமரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.