< Back
தேசிய செய்திகள்
இந்தி தெரியாத நிலை எங்கள் கிராமத்தில் இருக்க கூடாது; கிராம மக்களுக்கு இந்தி வகுப்புகள்! ஆச்சரியப்படுத்தும் மக்கள்

Image Credit:www.ndtv.com

தேசிய செய்திகள்

இந்தி தெரியாத நிலை எங்கள் கிராமத்தில் இருக்க கூடாது; கிராம மக்களுக்கு இந்தி வகுப்புகள்! ஆச்சரியப்படுத்தும் மக்கள்

தினத்தந்தி
|
23 Oct 2022 7:15 PM IST

கேரளாவின் செலனூர் பஞ்சாயத்தில் வசிக்கும் மக்கள், 100 சதவீத இந்தி கல்வியறிவை அடைய வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

கோழிக்கோடு,

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான செலனூர் பஞ்சாயத்தில் வசிக்கும் மக்கள், 100 சதவீத இந்தி கல்வியறிவை அடைய வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

செலனூர் பஞ்சாயத்து இந்தி மொழி தெரிந்த கிராமமாக விரைவில் மாற உள்ளது. இங்கு வட மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.கிராமத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் தொடர்பு கொள்ள, இங்குள்ள மக்களுக்கு இந்தி பேச வேண்டிய அவசியம் உள்ளது.

வயது, பாலினம் மற்றும் கல்வி என அனைத்து தடைகளையும் மீறி நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் இங்கு இந்தி கற்கிறார்கள்.வட மாநில தொழிலாளர்களுடன் தொடர்புகொள்வதற்கான அடிப்படை இந்தித் திறன்களை கற்றுக்கொள்ள மக்களுக்கு இந்தத் திட்டம் உதவும் என்பதால் இத்திட்டத்தில் மக்களின் அபரிமிதமான வரவேற்பு உள்ளது.

இது குறித்து, செலனூர் ஊராட்சி மன்றத் தலைவர் நவுஷீர் பி கூறியதாவது:-

20 முதல் 70 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு கிராம மக்களையும் இந்தி எழுத்தறிவு கொண்டவர்களாக மாற்றும் திட்டம் இது. எங்கள் திட்டத்திற்கும் இந்தி தொடர்பான சமீபத்திய சர்ச்சைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இத்திட்டத்தின் அடிப்படை பணிகள் கடந்த ஆண்டு துவங்கியது. இந்தியில் புலமை இல்லாதவர்களைக் கண்டறியவும், இந்தி கற்க ஆர்வமுள்ளவர்களைக் கண்டறியவும் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்க கிராம பஞ்சாயத்திலிருந்தே ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அதில் இந்தி ஆசிரியர்கள், முன்னாள் ராணுவத்தினர், வளைகுடாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் மற்றும் வீட்டில் சரளமாக இந்தி பேசக்கூடியவர்களும் கண்டறியப்பட்டு குழுவில் சேர்க்கப்பட்டனர்.மாலை நேர வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

கிராமப் பள்ளிகளின் இந்தி ஆசிரியர்களின் ஆதரவுடன், கற்பித்தல் மற்றும் ஆய்வுப் பொருட்கள் அடங்கிய தொகுதி தயாரிக்கப்பட்டது. பஞ்சாயத்தில் உள்ள 21 வார்டுகளிலும் இந்தி படிப்பு வகுப்புகள் படிப்படியாக தொடங்கப்பட்டன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செலனூர் பகுதியில், அன்றாட வாழ்க்கையை எளிதாக்க இந்தி தெரிந்திருப்பது காலத்தின் தேவையாக உள்ளது என்று அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்