டெல்லியில் தனிநபர் வருவாய் அதிகரிப்புக்கு இதுவே காரணம்... கெஜ்ரிவால் பெருமிதம்
|இந்த தனிநபர் வருவாயானது, ஓராண்டில் எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத வகையில் பெரிய அளவில் அதிகரித்து உள்ளது.
புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், அரசின் புள்ளிவிவர கையடக்க புத்தகம் 2023-ஐ வெளியிட்டு பேசும்போது, டெல்லியில் தனிநபர் வருவாய் நடப்பு நிதியாண்டில் ரூ.3 லட்சத்து 89 ஆயிரத்து 529-ல் இருந்து ரூ.4 லட்சத்து 44 ஆயிரத்து 768 ஆக அதிகரித்து உள்ளது. இது தேசிய சராசரியை விட 158 சதவீதம் அதிகம் ஆகும் என்று கூறினார்.
அவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், 2 கோடி டெல்லி மக்கள் மற்றும் டெல்லி அரசின் இரவு பகலான கடின உழைப்பு மற்றும் கூட்டு முயற்சிகளால் தனிநபர் வருவாய் அதிகரிப்பு என்ற சாதனை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில் பல புதிய மற்றும் எதிர்கால திட்டமிடுதல் பற்றிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், இன்னும் தேவையான பல விசயங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். நான் உறங்குவதற்கு முன் செல்ல வேண்டிய தொலைவு இன்னும் அதிகமுள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
இந்த தனிநபர் வருவாயானது, ஓராண்டில் எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத வகையில் பெரிய அளவில் அதிகரித்து உள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது பேசிய கெஜ்ரிவால் அரசின் திட்ட துறை மந்திரி அதிஷி, தேசிய சராசரியானது ரூ.1,72,276 ஆக உள்ளது. தனித்திறன் பெற்ற மற்றும் பயிற்சி பெறாத தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமும் நாட்டிலேயே டெல்லியில் அதிக அளவில் உள்ளது என்று கூறினார்.
டெல்லியில் 7,200-க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன என கூறிய அவர், 2.8 லட்சம் மின் நுகர்வோர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.