சாகர் தாலுகாவில் தெருநாய்கள் கடித்து மான் செத்தது
|சாகர் தாலுகாவில் தெருநாய்கள் கடித்து மான் செத்தது.
சிவமொக்கா-
சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா கானுகோடு கிராமம் வனப்பகுதியையோட்டி அமைந்துள்ளது. இதனால் சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன. இதனால் கிராமமக்கள் பீதியில் இருந்து வந்தனர்.
இந்தநிலையில் வனப்பகுதியில் இருந்து 2 வயது மான் ஒன்று உணவு தேடி கானுகோடு கிராமத்திற்குள் புகுந்தது. அப்போது கிராமத்தில் தெருநாய்கள் கூட்டமாக நின்றன.
அந்த நாய்கள், மானை பார்த்து துரத்தின. பின்னர் தெருநாய்கள் கூட்டமாக சோ்ந்து மானை கடித்தன. இதனை பார்த்த கிராமமக்கள் ெதருநாய்களை விரட்டினர். இதில் மான் பலத்த காயம் அடைந்தது.
இதுகுறித்து கிராமமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்போில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மானை மீட்டு சாகர் கால்நடை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் மான் சிகிச்சை பலனின்றி செத்தது. பின்னர் மானின் உடலை வனப்பகுதியில் வனத்துறையினர் புதைத்தனர்.