3-வது முறை பிரதமரான பிறகு மோடி மேற்கொள்ள இருக்கும் முதல் வெளிநாட்டு பயணம்
|பிரதமர் மோடி இந்த வாரம் இத்தாலிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தியாவின் பிரதமராக 3-வது முறை நரேந்திர மோடி பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழா கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. இந்த நிலையில் பிரதமராக மீண்டும் பதவியேற்ற பிறகு மோடி மேற்கொள்ள இருக்கும் முதல் வெளிநாட்டு பயணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலில் உள்ள அபுலியா பகுதியில் வரும் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை ஜி-7 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக உச்சிமாநாட்டில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்த வாரம் இத்தாலி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வரும் 13-ந்தேதி இத்தாலிக்கு புறப்படுவார் என்றும், 14-ந்தேதி இந்தியாவிற்கு திரும்புவார் என்றும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பிரதமரின் பயண திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.