< Back
தேசிய செய்திகள்
திருவனந்தபுரம்: கம்யூனிஸ்ட் நிர்வாகி மீது ஆசிட் வீச்சு
தேசிய செய்திகள்

திருவனந்தபுரம்: கம்யூனிஸ்ட் நிர்வாகி மீது ஆசிட் வீச்சு

தினத்தந்தி
|
24 July 2023 11:46 AM IST

ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த சுதீர்கான் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மாறநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுதீர்கான் (வயது45). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் செயலாளராக உள்ளார். மேலும் மாரநல்லூர் ஊராட்சி கிளிகொட்டுகோணம் வார்டு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். சம்பவத்தன்று காலை சுதீர்கான் தனது வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு சஜிகுமார் என்பவர் ஒரு பார்சலுடன் வந்திருக்கிறார். அவர் வீட்டில் இருந்த சுதீர்கானின் மனைவி ஹிருனிசாவிடம், சுதீர்கானை சந்தித்து பார்சல் ஒன்றை கொடுக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து சஜிகுமாரை வீட்டுக்குள் அனுப்பினார். அவர் சென்ற சிறிது நேரத்தில் வீட்டின் உள்ளே இருந்து சுதீர்கான் அலறும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஹிருனிசா, வீட்டுக்குள் வந்து பார்த்தார். அப்போது செல்போன் வெடித்து சிதறிவிட்டது என்று கூறி விட்டு சுதீர்கானை பார்க்க வந்திருந்த சஜிகுமார் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார். வீட்டுக்குள் சுதீர்கான் முகம், கண்கள், மார்பு, வயிறு மற்றும் கைகளில் தீக்காயமடைந்து வலி தாங்காமல் அலறி துடித்தார்.

இதையடுத்து தனது கணவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கட்டக்கடை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹிருனிசா சேர்த்தார். அங்க அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் மீது ஆசிட் வீசியதற்கான காயங்கள் இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சுதீர்கானின் வீட்டுக்கு சென்று போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது அவரது வீட்டின் இருந்த துணிகள் மற்றும் சில பொருட்கள் எரிந்து கிடந்ததை பார்த்தனர். மேலும் அவரது செல்போன் வெடிக்காமல் நல்ல நிலையில் இருந்ததை பார்த்தனர். இதனால் சுதீர்கானின் மீது ஆசிட் வீசப்பட்டதை உறுதி செய்தனர். அவரை சந்திக்க வந்த சஜிகுமார் தான், சுதீர்கானின் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

வெள்ளூர்கோணம் பால் கூட்டுறவு சங்க தலைவராக சுதீர்கான் இருந்து வரும் நிலையில், அங்கு சஜிகுமார் செயலாளராக இருந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற சஜிகுமார், சில பொறுப்புகளை வகித்து வந்திருக்கிறார். சங்கத்தின் சில பண பரிவர்த்தனைகளில் சுதீர்கான் மற்றும் சஜிகுமார் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அவர் ஆசிட் வீச்சில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதனால் தலைமறைவாகிவிட்ட சஜிகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த சுதீர்கான், திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் செய்திகள்