திருவள்ளுவரின் எழுத்துக்கள் உலகம் முழுவதையும் ஊக்குவிக்கின்றன - பிரதமர் மோடி பெருமிதம்
|திருவள்ளுவர், ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பிரான்ஸ் செர்ஜி நகரில், பார்க் பிரான்ஸ்வா மித்தேரான் என்ற இடத்தில், பிரான்ஸ் வொரெயால் தமிழ் கலாசார மன்றம் சார்பில், திருவள்ளுவர் வெண்கல சிலை அமைக்கப்பட்டது. இந்த சூழலில் திருவள்ளுவர் சிலையை புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நேற்று திறந்து வைத்தார்.
இந்நிலையில் பிரான்சில் உள்ள திருவள்ளுவர் சிலையின் புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான தனது பதிவில், "பிரான்சின் செர்ஜியில் உள்ள திருவள்ளுவர் சிலை, நமது கலாச்சாரப் பிணைப்புகளுக்கு அழகான ஒரு சான்றாகும். திருவள்ளுவர் ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார். அவரது எழுத்துக்கள் உலகம் முழுவதும் உள்ள லட்சக் கணக்கானவர்களை ஊக்குவிக்கின்றன" என்று அதில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, பாரீஸ் நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றுகையில், "உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் மிகப் பழமையான மொழி இந்திய மொழி என்பதில் மிகப் பெரிய பெருமை எனக்கு உண்டு. பிரான்ஸ் நாட்டில் இந்தியாவின் சார்பாக திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட உள்ளது. பிரான்சில் திருவள்ளுவர் சிலையை அமைப்பது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை" என்று தெரிவித்திருந்தார்.