இஸ்ரேலில் இருந்து 197 இந்திய பயணிகளுடன் டெல்லி வந்த மூன்றாவது விமானம்..!!
|இஸ்ரேலில் இருந்து 197 இந்திய பயணிகளுடன் மூன்றாவது விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது
புதுடெல்லி,
இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் இன்று 9ம் நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரால் இஸ்ரேலில் பல இந்தியர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தது. இதனிடையே, இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. அதன்படி, முதல்கட்டமாக இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டனர். அவர்கள் நேற்று முன் தினம் காலை டெல்லி வந்தடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து மேலும் 235 இந்தியர்கள் நேற்று மீட்கப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 235 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு 2வது மீட்பு விமானம் நேற்று காலை டெல்லி வந்தடைந்தது.
இந்நிலையில் இஸ்ரேலில் இருந்து 197 இந்திய பயணிகளுடன் மூன்றாவது விமானம் டெல்லி விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியது. டெல்லி விமானநிலையம் வந்தடைந்த இந்தியர்களை மத்திய மந்திரி கவுசல் கிஷோர் நேரில் சென்று வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிட ம் பேசிய மத்திய மந்திரி கவுஷல் கிஷோர், "பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் அர்ப்பணிப்புடன், இஸ்ரேலில் இருந்து இந்திய குடிமக்கள் இங்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பி வந்ததும் மகிழ்ச்சியாக உள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே இஸ்ரேலில் சிக்கியுள்ள எஞ்சிய இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது