ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற எந்த எல்லைக்கும் செல்வார்கள்; பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மீது ராகுல் காந்தி கடும் தாக்கு
|ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்று பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மீது ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
பெங்களூரு:
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் மாநாடு பெங்களூருவில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாள் மாநாட்டில் ராகுல் காந்தியின் பதிவு செய்யப்பட்ட வீடியோ உரை திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் ராகுல் காந்தி பேசியதாவது:-
மணிப்பூர் மக்களின் வலியை உங்களால் உணர முடியவில்லை என்றால் நீங்கள் காங்கிரசை வழிநடத்த முடியாது. 2 கட்சிகளின் கொள்கைகளுக்கு இடையே தான் போர் நடக்கிறது. அதாவது ஒருபுறம் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., மற்றொரு புறம் காங்கிரஸ். அவர்கள் சில குறிப்பிட்ட நபர்கள் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்றும், அவர்கள் நாட்டின் வளங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.
குறிப்பிட்ட சிலருக்கு நாட்டின் வளங்களை வழங்க விரும்புகிறார்கள். நீதித்துறை, அதிகாரிகள், தேர்தல் ஆணையம், கல்வி நிலையங்களை அவர்களுக்கே சொந்தமானவை என்பது போல் கைப்பற்ற நினைக்கிறார்கள். காங்கிரஸ் ஒற்றுமை, நல்லிணக்கத்தை விரும்புகிறது. அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்ல காங்கிரஸ் விரும்புகிறது. நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பதாக உணர வேண்டும்.
மணிப்பூர் மாநிலம் கடந்த 3 மாதங்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அங்கு நடைபெறும் கலவரம் குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது அவரது கொள்கை என்று அவருக்கு தெரியும். அந்த கொள்கை தான் அந்த மாநிலத்தை பற்றி எரிய வைத்துள்ளது. பிரதமர் குறைந்தபட்சம் மணிப்பூருக்கு சென்று மக்களை சந்தித்து இருக்க வேண்டும்.
கடந்த காலங்களில் எந்த பிரதமரும் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் மக்களை சந்தித்து பேசி இருப்பார்கள். ஆனால் தற்போது உள்ள பிரதமர், தான் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிரதமர் என்று நினைக்கவில்லை. அவர் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். போன்ற சிலருக்கு மட்டும் பிரதமராக இருக்கிறார். நாட்டின் இளைஞர்கள் மணிப்பூர் மக்களின் வலியை பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்.
அங்கு செல்ல முடியாவிட்டாலும் அவர்களின் வலியை பகிர்ந்து கொள்ளுங்கள். பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு ஆட்சி அதிகாரத்தை விட வேறு எதுவும் பெரிய விஷயம் கிடையாது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். இதற்காக நாட்டை தீவைத்தும் கொளுத்துவார்கள். மக்களின் வலியை அவர்கள் உணர மாட்டார்கள். அவர்கள் ஆட்சி அதிகாரத்தை பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள். அவர்கள் வெறுப்பை ஏற்படுத்துகிறார்கள்.
எதிர்க்கட்சிகளின் அணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டியுள்ளோம். இதை பிரதமர் குறை சொல்கிறார். இதன் மூலம் அவர் நாட்டை இழிவுபடுத்துகிறோம் என்பதை உணராமல் அவர் பேசுகிறார்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.