உ.பி.யில் கூட்டணி ஆட்சி அமையும்; இடங்கள் முறையாக ஒதுக்கப்படும் - அகிலேஷ் யாதவ்
|தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் பா.ஜனதாவை விரட்டுவார்கள் என சமாஜ்வாதி கட்சி நம்புவதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
நாடாளுமன்ற தேர்தல் அலை நாடு முழுவதும் வீசத் தொடங்கி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையிலும் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் வகுப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன.
உத்தரபிரதேசத்தில் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாடி, நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுகிறது.
இந்த சூழலில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தலில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை நேற்று வெளியிட்டார். அதில் தற்போதைய எம்.பி.யும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ், மெயின்புரி தொகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளார். மற்றொரு எம்.பி.யான ஷபிகுர் ரகுமான், சம்பால் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அகிலேஷ் யாதவின் வேட்பாளர் பட்டியல் குறித்து கருத்து தெரிவித்த உத்தரபிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் அவினேஷ் பாண்டே, "சமாஜ்வாடி கட்சியின் ஒருதலைப்பட்ச கூட்டணி கொள்கையை காங்கிரஸ் மற்றும் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. சமாஜ்வாடி கட்சி கூட்டணி தர்மத்தை பின்பற்றவில்லை. சமாஜ்வாடி கட்சி இந்தியா கூட்டணியில் ஒருதலைப்பட்சமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அகிலேஷ் யாதவ் தன்னிச்சையாக செயல்படுகிறார். நேற்று வெளியிடப்பட்ட பட்டியலிலும் காங்கிரஸ் கட்சி உரிமை கோரும் பல இடங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு சமாஜ்வாடி கட்சி செய்வது மிகவும் ஆபத்தானது. வேட்பாளர் பட்டியல் பற்றிய தகவல்கள் எங்களுக்கு (காங்கிரஸ்) கிடைக்கவில்லை. காங்கிரஸ் எப்போதும் கூட்டணி தர்மத்தை பின்பற்றும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கூட்டணி தர்மத்தை சமாஜ்வாதி கட்சி சரியாக பின்பற்றிவருவதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "உத்தரபிரதேசத்தில் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலை சந்திக்கிறோம். அதனால், தொகுதிகளை முறையாக ஒதுக்க வேண்டும். மாநிலத்திலிருந்து பா.ஜனதாவை வெளியேற்ற முயற்சிக்கிறோம். தேர்வு செய்யப்படும் வேட்பாளர்கள் பா.ஜனதாவை விரட்டுவார்கள் என சமாஜ்வாதி கட்சி நம்புகிறது. குறிப்பிட்ட வேட்பாளருக்காக எந்தவொரு சமரசமும் செய்யவில்லை. பா.ஜனதாவை தோற்கடிப்பதற்கான அனைத்து வகையான முயற்சிகளையும் எடுக்கிறோம்" என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.