"கடந்த காலங்களில் விளையாட்டுத்துறையில் சிபாரிசு மற்றும் ஊழல் அதிகமாக இருந்தது" - பிரதமர் மோடி
|விளையாட்டுத்துறையில் தொழில் தர்மத்திற்கு பதிலாக, உறவினர்களின் சிபாரிசு மற்றும் ஊழல் அதிகமாக இருந்தது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஆமதாபாத்,
இந்தியாவில் கவுரவமிக்க போட்டிகளில் ஒன்றான தேசிய விளையாட்டு 1924-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட இந்த போட்டி பின்னர் நடைமுறை சிக்கல் காரணமாக சில சமயங்களில் குறிப்பிட்ட காலத்துக்குள் நடைபெறவில்லை.
கடைசியாக 35-வது தேசிய விளையாட்டு 2015-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்றது. பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடர் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய 6 நகரங்களில் இன்று முதல் அக்டோபர் 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இரு நாள் பயணமாக குஜராத் வந்துள்ள பிரதமர் மோடி ஆமதாபாத்தில் 36-வது தேசிய விளையாட்டு போட்டியினை இன்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது;-
"கடந்த காலங்களிலும் நமது நாட்டில் திறமையான விளையாட்டு வீரர்கள் இருந்தார்கள். பதக்கங்களை நாம் முன்பே வெல்ல தொடங்கியிருக்கலாம். ஆனால் விளையாட்டுத்துறையில் தொழில் தர்மத்திற்கு பதிலாக, உறவினர்களின் சிபாரிசு மற்றும் ஊழல் அதிகமாக இருந்தது.
நாங்கள் அந்த அமைப்பை சுத்தம் செய்து இளைஞர்களிடையே புதிய நம்பிக்கையை ஊட்டியுள்ளோம். விளையாட்டில் உங்கள் வெற்றி மற்ற துறைகளில் நாட்டின் வெற்றிக்கு வழி வகுக்கும். விளையாட்டுத்துறையில் நமது மென்மையான சக்தி உலக அளவில் நம் நாட்டின் அடையாளத்தை கணிசமாக மேம்படுத்தும்."
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.