கோவையில் இருந்து பாலக்காடு சென்ற போது பரபரப்பு: ரெயிலை நிறுத்தி விட்டு இறங்கி சென்ற என்ஜின் டிரைவர்..!!
|கோவையில் இருந்து பாலக்காடு சென்ற ரெயிலை என்ஜின் டிரைவர் நிறுத்தி விட்டு இறங்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 2½ மணி நேரம் தாமதம் ஆனதால் பயணிகள் அவதியடைந்தனர்.
பாலக்காடு,
கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து பாலக்காடு, கோவை வழியாக கர்நாடகா மாநிலம் எஸ்வந்த்பூர் பகுதிக்கு எஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் எஸ்வந்த்பூரில் இருந்து ரெயில் புறப்பட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவை ரெயில் நிலையத்துக்கு வந்தது. அங்கு ½ மணி நேரம் ரெயில் நின்றது.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பாலக்காட்டை நோக்கி வந்தது. தொடர்ந்து வாளையார் ரெயில் நிலையத்தில் காலை 6 மணிக்கு எஸ்வந்த்பூர் ரெயில் வந்து நின்றது. ஆனால், அந்த ரெயில் நிலையத்தில் ரெயிலை நிறுத்த அனுமதி இல்லை. இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் எதற்காக ரெயில் நிற்கிறது என தெரியாமல் அங்குள்ள ஒரு அதிகாரியிடம் கேட்டனர். மேலும் இந்த ரெயில் நிலையத்தில் ரெயில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. வெகு நேரமாகியும் புறப்பட வில்லை என கேள்வி எழுப்பினர்.
டிரைவர் இறங்கி சென்றார்
பின்னர் அதிகாரி ரெயில் என்ஜின் பகுதிக்கு சென்று பார்த்த போது, அங்கு டிரைவர் (லோகோ பைலட்) இல்லை. அவர் ரெயிலை நிறுத்தி விட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாலக்காடு ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் என்ஜின் டிரைவர் உடல்நிலை சரியில்லாததால் ரெயிலை நிறுத்தி விட்டு கீழே இறங்கி சென்றது தெரியவந்தது. இதனால் பயணிகள் வெகு நேரம் ரெயிலில் காத்திருந்தனர். பாலக்காடு உள்ளிட்ட இடங்களுக்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். இதையடுத்து பாலக்காட்டில் இருந்து மற்றொரு என்ஜின் டிரைவர் வரவழைக்கப்பட்டார்.
பயணிகள் அவதி
அதன் பின்னர் 2½ மணி நேரம் தாமதமாக காலை 8.30 மணிக்கு வாளையார் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டு சென்றது. என்ஜின் டிரைவர் ரெயிலை நடுவழியில் நிறுத்தி விட்டு சென்றதால், அந்த வழித்தடத்தில் வந்த பிற ரெயில்களும் 2½ மணி நேரம் வாளையார் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் அந்த ரெயில்களில் வந்த பயணிகளும் சிரமம் அடைந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.