பா.ஜனதா ஆட்சியில் நோயாளிகள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை; டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
|பா.ஜனதா ஆட்சியில் நோயாளிகள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பாதுகாப்பு இல்லை
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையை கூட நோயாளிகளுக்கு பிரச்சினைகள் இன்றி பா.ஜனதா அரசால் வழங்க முடியவில்லை. 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிப்பால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை நிவாரணம் வழங்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை வந்துள்ளது.
பா.ஜனதா ஆட்சியில் நோயாளிகள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. மாநிலத்தில் அரசு இருக்கிறதோ, இல்லையோ என்ற நிலை வந்துள்ளது. ஆளும் கட்சியை சேர்ந்த சட்டத்துறை மந்திரியே, நாங்கள் ஆட்சி நடத்தவில்லை, அரசை தள்ளி கொண்டு தான் செல்கிறோம் என்று கூறியுள்ளார். இதன்மூலம் பா.ஜனதா அரசால் மாநில மக்களை பாதுகாக்க சாத்தியமில்லை.
சாதி பிரச்சினை வரவில்லை
காங்கிரஸ் கட்சியினர், லிங்காயத் முதல்-மந்திரியை குறி வைப்பதாக பா.ஜனதாவில் அவப்பிரசாரம் செய்து வருகின்றனர். பசவராஜ் பொம்மை, லிங்காயத் சமுதாயத்தின் மூலமாக மட்டும் முதல்-மந்திரி ஆகி இருக்கிறாரா?. அரசியலமைப்பு சட்டத்தின்படி அவர், இந்த மாநிலத்திற்கான முதல்-மந்திரி. அரசின் ஊழல் மற்றும் பிற முறைகேடுகள் சுட்டி காட்டும் விதமாக, பா.ஜனதா அரசை தான் குறி வைத்துள்ளோம்.
இந்த அரசை வழிநடத்துவது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தான். அரசின் தோல்வியை முன்வைத்து, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை குறி வைத்து, இந்த ஆட்சியில் நடைபெறும் ஊழல்கள் பற்றி மக்களிடம் போஸ்டர் மூலமாக தெரியப்படுத்துகிறோம். இந்த விவகாரத்தில் சாதி பிரச்சினையே வரவில்லை.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.