"காசி தமிழ் சங்கமத்தில் அரசியல் இல்லை, ஆன்மிகம் இருக்கிறது" - ஆடிட்டர் குருமூர்த்தி
|காசி தமிழ் சங்கமத்தில் அரசியல் இல்லை, ஆன்மிகம் இருக்கிறது என்று ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்தார்.
வாரணாசி,
காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் காசி தமிழ்நாடு வணிக பாடம் எனும் வர்த்தக இணைப்புக்கான ஒரு நாள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்த்தக தலைவர்கள் பங்கேற்றனர். இதில் துக்ளக் ஆசிரியரும், ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது ஆடிட்டர் குருமூர்த்தி கூறியதாவது:-
"தமிழகத்தின் காஞ்சிப்பட்டு எந்த அளவுக்கு பிரபலமாக உள்ளதோ, எந்த அளவுக்கு வளர்ச்சியை எட்டியுள்ளதோ அதன் பிரதிபலிப்பை பனாரஸ் (காசி) பட்டில் காண முடிகிறது.
இந்தியா ஆன்மிகத்தால் மட்டும் பிணைக்கப்பட்ட நாடு அல்ல, வர்த்தகத்தால், பழக்கவழக்கங்களால், போக்குவரத்தால் பிணைக்கப்பட்ட நாடாகும். இந்த தன்மையை மனதில் கொண்டு 'கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்' என்று பாரதியார் பாடினார்.
காசி தமிழ் சங்கமத்தில் அரசியல் இல்லை, ஆன்மிகம் இருக்கிறது, தொன்மையான கலாசாரத்துடன் நாட்டை காசி பிணைத்திருப்பதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் காசிக்கு வர வேண்டும் என்று விரும்புவது இயற்கைதான்.
இந்த விருப்பத்தை நிறைவேற்ற மிக குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாக காசி தமிழ் சங்கமம் நிகழ்வை திட்டமிட்டு செயல்படுத்தி இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுக்குரியவர்."
இவ்வாறு அவர் கூறினார்.