கர்நாடகத்தில் புதிய என்ஜினீயரிங் கல்லூரி தொடங்கும் திட்டம் இல்லை; உயர்கல்வி மந்திரி அஸ்வத் நாராயண் தகவல்
|கர்நாடகத்தில் புதிய என்ஜினீயரிங் கல்லூரி தொடங்கும் திட்டம் இல்லை என்று உயர்கல்வி மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர் லிங்கேஷ், தனது தொகுதியில் புதிதாக என்ஜினீயரிங் கல்லூரி தொடங்கும் திட்டம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.அதற்கு உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பதிலளிக்கையில், "கர்நாடகததில் 16 அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 3 ஆயிரத்து 670 இடங்கள் உள்ளன. இதில் 2,086 இடங்கள் மட்டுமே பூர்த்தி ஆகியுள்ளன. அந்த கல்லூரிகளில் உள்ள இடங்களே காலியாக உள்ளதால், புதிதாக என்ஜினீயரிங் கல்லூரிகளை தொடங்கும் திட்டம் இல்லை.
ஹாசன், ஹாவேரி, கே.ஆர்.பேட்டை, தலகல், பெங்களூருவில் 2 என மொத்தம் 7 என்ஜினீயரிங் கல்லூரிகளை தரம் உயர்த்த முடிவு செய்துள்ளோம். இந்த 7 கல்லூரிகளும் ஐ.ஐ.டி. போல் கர்நாடக தொழில்நுட்ப நிறுவனங்களாக மாற்றப்படுகிறது. இதற்காக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளோம்" என்றார்.