< Back
தேசிய செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இல்லை - மத்திய சட்ட மந்திரி தகவல்
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இல்லை - மத்திய சட்ட மந்திரி தகவல்

தினத்தந்தி
|
22 July 2022 1:42 AM IST

சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மத்திய சட்ட மந்திரி கூறினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டுகளின் நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் உள்ளதா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு கூறியதாவது:-

நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இல்லை. கடந்த 2010-ம் ஆண்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவதற்கான 114-வது அரசியல் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அந்த மக்களவை கலைக்கப்பட்டவுடன் அது காலாவதி ஆகிவிட்டது என்று அவர் கூறினார்.

மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய ஜல்சக்தி மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் கூறியதாவது:-

கடல் அரிப்பு தடுப்பு, மழைநீர் வெளியேற்றம் உள்ளிட்ட வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளை எடுப்பது மாநில அரசுகளின் பொறுப்பு. தொழில்நுட்ப வழிகாட்டுதல் அளிப்பதும், நிதியுதவி வழங்குவதும்தான் மத்திய அரசின் வேலை ஆகும் என்று அவர் கூறினார்.

மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர் அளித்த பதில் வருமாறு:-

கடந்த நிதிஆண்டில் (2021-2022) பொய் செய்திகளை பரப்பிய 94 யூ டியுப் சேனல்களையும், 19 சமூக வலைத்தள கணக்குகளையும், 747 இணையதள முகவரிகளையும் மத்திய அரசு முடக்கியது.

பொய் செய்திகள் மூலம் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய வெளியுறவு இணை மந்திரி முரளீதரன் கூறியதாவது:-

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம்வரை கொரோனா காலகட்டத்தின்போது, வளைகுடா உள்ளிட்ட 18 நாடுகளில் இருந்து 4 லட்சத்து 23 ஆயிரத்து 559 இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள், தாயகம் திரும்பினர்.

அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து வந்தனர்.

அவர்களுக்கு வேலை இழப்போ, சம்பள பாக்கியோ ஏற்படாமல் இந்திய தூதரகங்கள் பார்த்துக் கொண்டன. 'வந்தே பாரத்' திட்டத்தின்கீழ், இந்திய தொழிலாளர்கள் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டனர் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்